இந்தியாவில் நடந்த போலியான இலங்கை கிரிக்கெட் தொடர் பற்றி விசாரணை

752

இந்தியாவின் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற போலி கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் இடம்பெறும் டி-20 தொடராக காண்பிக்கப்பட்ட கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் இந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் வீரர்களாக சித்தரிக்கப்பட்ட வீரர்கள் விளையாடும் இரு போட்டிகள் கடந்த திங்கட்கிழமை யூடியுப் (Youtube) நேரடி வர்ணனையில் ஒளிபரப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனை இந்தியாவின் முன்னணி விளையாட்டு இணையத்தளம் ஒன்றும் பந்துக்கு பந்து வர்ணனை செய்தது. 

ஐ.பி.எல் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்த திட்டம்?

வட இந்தியாவின் பரபரப்பான நெடுஞ்சாலைக்கு அடுத்து இருக்கும் தொலைதூர விவசாய நிலம் ஒன்றில் இந்தப் போட்டிகள் நடந்தாலும் அது இலங்கையில் நடப்பதாக நம்ப வைப்பதற்கு இலங்கை வீரர்களின் விளம்பரங்களை தொங்க விட்ட ஏற்பாட்டாளர்கள் அரங்க கூடாரங்களையும் அமைத்திருந்தனர்.     

சூதாட்டம் தொடர்பான துப்புக் கிடைத்ததை அடுத்து இலங்கையில் இருந்து பல ஆயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் வட இந்தியாவின் சவரா கிராமத்தில் இருக்கும் அந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பெரும்பாலும் சட்டவிரோதமான மோசடி மற்றும் சூதாட்டக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் வீரர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். 

“இணைய சூதாட்டத்தை இலக்காகக் கொண்டு இலங்கையில் இலங்கை அணிகள் விளையாடும் போட்டியாக சித்தரித்து இந்தப் போட்டிகளை அவர்கள் நடத்தியுள்ளனர்” என்று மொஹாலி பொலிஸ் பிரதானி குல்தீப் சிங் சஹால் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் தெற்கில் உள்ள பதுளை நகரில் ஊவா கிரிக்கெட் சம்மேளனத்தின் மூலம் “ஊவா டி20 லீக்” போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இந்தியாவின் முன்னணி விளையாட்டு இணையத்தளம் ஒன்று அறிவித்திருந்தது.    

கடந்த ஜூன் 29 தொடக்கம் ஜூலை 05 வரை நடைபெறும் இந்தத் தொடரில் இலங்கை தேசிய அணி வீரர்கள் பங்கேற்பதாகவும் நான்கு அணிகளுடன் மொத்தம் 14 போட்டிகள் நடைபெறுவதாகவும் அந்த இணையத்தள அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.  

எனினும் அப்படி ஒரு கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறவில்லை என்பதோடு நாட்டில் அந்தப் பெயரில் போட்டிகளே நடத்தப்படவில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபையும் நிராகரித்தது.  

சங்கா, மஹேலவை விசாரணை செய்ய நான் கூறவில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே

இந்த விடயம் பற்றி ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளை அறிவுறுத்தி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.  

“இலங்கை கிரிக்கெட் சபை அல்லது அதனுடன் தொடர்புபட்ட எந்த ஒரு அமைப்பும் அனுமதி அளிக்காத இவ்வாறான போட்டித் தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் சபை தெளிவுபடுத்த விரும்புகிறது. கூறப்படும் இந்த போட்டித் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் சபை எந்த பொறுப்பும் ஏற்காது” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.    

சிலர் எமது செயற்பாடுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று ஊவா மாகாண கிரிக்கெட் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் பகீரதன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

“எமது சம்மேளனம் அவ்வாறான போட்டித் தொடருக்கு அனுமதி அளிக்கவோ அல்லது நடத்தவோ இல்லை. இது பற்றி நாம் விசாரணை நடத்துவதோடு. இலங்கை கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என்று பகீரதன் தெரிவித்தார்.

இந்தப் போட்டித் தொடருக்கான விளம்பரத்தில் இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரரான பர்வீஸ் மஹ்ரூப், இது ஒரு போலியான விளம்பரம் என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். 

இது போலியானது. போட்டித் தொடரில் விளையாடுவது பற்றி யாரும் என்னோடு பேசவில்லை நானும் யாருடனும் பேச ஆர்வம் காட்டவில்லை. தயவு செய்து எந்த பிரச்சாரமும் கொடுக்க வேண்டாம் என்று மஹ்ரூப் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த தொடரில் விளாயாடும் நான்கு அணிகளுக்கு பர்வீஸ் மஹ்ரூப், திலகரத்ன டில்ஷான், திலான் துஷார மற்றும் அஜந்த மெண்டிஸ் தலைவர்களாக செயற்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.    

போட்டியை நடத்தும் இந்திய கிராமத்தின் மைதானத்திற்கு சொந்தக்காரர்களான ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் சங்கம் இதுபற்றி அளித்த வாக்குமூலத்தில், ஒருசில நாட்களைக் கொண்ட உள்ளூர் போட்டித் தொடர் ஒன்றை நடத்துவதாகவும், கொரோனா தொற்றுக் காரணமாக பார்வையாளர்கள் இன்று அது நடத்தப்படுவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தமக்கு கூறியதாக தெரிவித்துள்ளனர். 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

“இந்தப் போட்டிகளை யார் ஏற்பாடு செய்கிறார்கள் என்பது எமக்குத் தெரியாது. எமக்குக் கூட உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. மைதானத்தை சூழ கூடாரம் இட்டு போட்டியை பார்ப்பதையும் அவர்கள் தடுத்தார்கள்” என்று குறித்த கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரி ஒருவர் இந்திய பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்தார்.   

எனினும் இணையத்தளத்தில் எத்தனை பேர் போட்டியை பார்த்தார்கள் அல்லது போட்டிகளுக்கு எத்தனை தொகை செலவிடப்பட்டது என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. 

யூடியுப்பில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டபோதும் நெருக்கமான காட்சிகள் பிடிக்கப்படவில்லை. அனைத்து வீரர்களும் முகக்கவசம் அணிந்திருந்ததால் யார் என்பது அடையாளம் காண முடியாமல் இருந்தது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<