இரசிகர்களுக்கு பதிலாக ஸ்மித்திடம் மன்னிப்புக் கோரிய கோஹ்லி

2372
AFP

இந்திய கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் ஏனையோருக்கு தீய முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என விராட் கோஹ்லி தெரிவித்ததுடன், அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இம்முறை உலகக் கிண்ணத்தின் 14ஆவது லீக் போட்டி நேற்றயை தினம் (09) இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

ஆஸிக்கு எதிராக தமது பலத்தை நிரூபித்ததாக கோஹ்லி பெருமிதம்

கடந்த சில மாதங்களுக்கு முன் ……

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய போதும், பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட சென்றபோதும், இரசிகர்கள் ஏளனம் செய்யும் வகையில் கூச்சலிட்டனர். விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாடும் போது, ஸ்டீவ் ஸ்மித் பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டார். இந்தநிலையில், மைதானத்தில் இருந்த இரசிகர்கள் ஸ்மித்தை ஏளனப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டனர்.

குறித்த சம்பவத்தை கண்ட விராட் கோஹ்லி மைதானத்தில் இருந்த இரசிகர்களை பார்த்து, ஸ்டீவ் ஸ்மித்தை ஏளனப்படுத்த வேண்டாம் எனவும், அவருக்கு உற்சாகப்படுத்தும் வகையில் கைத்தட்டல்களை வழங்குமாறும் சைகை முறையில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து விராட் கோஹ்லியிடம் சென்ற ஸ்டீவ் ஸ்மித், கோஹ்லியின் தோலில் தட்டி தனது நன்றியினை தெரிவித்திருந்தார்.

போட்டி நிறைவடைந்ததும் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் விராட் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கோஹ்லி, இந்திய இரசிகர்கள் ஏனையோருக்கு தீய முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இங்கு (மைதானத்தில்) நிறைய இந்திய இரசிகர்கள் உள்ளனர். அவர்கள், ஏனையோருக்கு ஒரு தீய முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. ஸ்மித் ஏளனப்படுத்தும் வகையில் எந்த விடயத்தையும் செய்யவில்லை என்பது எனது கருத்து. இதே இதுபோன்ற தவறொன்றை நான் செய்து, அதனை உணர்ந்த பின்னர் மன்னிப்பு கேட்டும், இவ்வாறான சம்பவங்கள் நிகழுமாயின் அதனை என்னால் ஏற்க முடியாது. எனவே இரசிகர்களுக்கு பதிலாக நான் ஸ்மித்திடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்”

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பின்னர், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஸ்டீவ் ஸ்மித், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய போதும், இரசிகர்கள் இவ்வாறு ஏளனப்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டிருந்தனர்.

“ஸ்மித் கடினமான காலப்பகுதிக்கு பின்னர் அவரது அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறார். நான், ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவதை பார்த்தேன். நாம், இருவரும் பல தடவைகள் மைதானத்தில் முரண்பட்டிருக்கிறோம். ஆனால், அவர் ஒவ்வொருமுறை களமிறங்கும் போதும், இந்த மாதிரியான சம்பவங்கள் அவரை பாதிக்கும் என்பதை நான் அறிவேன்.  என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் இப்போது கடினமாக உழைத்து, அணிக்காக சிறந்த முறையில் விளையாடி வருகின்றார்” என்றார்.

இந்திய அணி, இம்முறை உலகக் கிண்ணத்தில் தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் 13ம் திகதி ட்ரெண்ட் ப்ரிட்ஜில் எதிர்கொள்ளவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<