முன்னறிவிப்பின்றி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் – கோஹ்லி

175

தென்னாபிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணித்தியாலத்துக்கு (90 நிமிடங்கள்) முன்பு தான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் திகதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இதில் இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோஹ்லி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு தலைவர் பதவியில் இருந்து கோஹ்லி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

எனவே, ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து விராட் கோஹ்லி நீக்கப்பட்டது அவரின் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதற்கிடையே மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.

மறுபுறத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ இடம் விராட் கோஹ்லி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

இது இவ்வாறிருக்க, ஒருநாள் அணியின் தலைவர் பதவியை பறித்த விவகாரத்தில் விராட் கோஹ்லிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே இலேசான உரசல், மோதல் இருப்பதாக பல்வேறு வதந்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால், காயம் காரணாக டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில், மகளின் பிறந்தநாளைக் காரணம்காட்டி விராட் கோஹ்லி, விலக்கு கேட்பதும் பல்வேறு சந்தேகங்களை கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுப்பியது

இந்த நிலையில், இந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்தார். அப்போது அவரிடம் ஒருநாள் அணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பில் கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோஹ்லி பதிலளிக்கையில்,

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணித் தேர்வு நடக்கும் போதுதான் ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது எனக்குத் தெரியும். முன்கூட்டியே என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை, எந்தவொரு முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.

குறிப்பாக, தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெற்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு ஒன்றரை மணித்தியாலயத்துக்கு முன் என்னை தேர்வுக்குழுத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டெஸ்ட் அணி விபரங்களை தெரிவித்தார். பேசி முடிக்கும்போது, நாங்கள் தேர்வுக்குழுவில் உள்ள 5 பேரும், உங்களை ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதான் நடந்தது எனத் தெரிவித்தார்

எவ்வாறாயினும், நான் நிச்சயம் ஒருநாள் தொடரில் விளையாடுவேன், எப்போதும் இந்திய அணிக்காக இருப்பேன் என கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தபின் விராட் கோஹ்லியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், கோஹ்லி பிடிவாதமாக இருந்ததால்தான் அவரின் முடிவுக்கு பிசிசிஐ சம்மதித்தது எனவும் கங்குலி தெரிவித்திருந்தார். இது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில்,

T20 உலகக் கிண்ணத் தொடருடன் நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, நல்லமுறையில் ஏற்றுக்கொண்டனர்,

வேண்டாம் இராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை, இதற்கான எந்தவொரு தயக்கமும் காட்டவில்லை.

ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக தொடர விரும்புகிறேன் என பிசிசிஐ இடம் தெரிவித்தேன். என்னுடைய தரப்பிலிருந்து தகவலை தெளிவாகத் தெரிவித்தேன். ஆனால் பிசிசிஐ நிர்வாகிகளும், தலைவர்களும் என்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கும் தலைவராக நீடிக்க விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை எனவும் தெரிவித்திருந்தேன் எனத் தெரிவித்தார்.

இதனால் T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோஹ்லியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது குறித்து கேள்வி எழுகிறது.

இதனிடையே, ரோஹித் சர்மாவுடன் மோதல் போக்கு இருக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, இதுகுறித்து நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<