பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப்பின் ஒப்பந்தம் இரத்து

Pakistan Cricket Board

111

அவுஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடாததால் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்புக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக ஆடிய ஹாரிஸ் ரவூப் ஓட்டங்களை வாரி வழங்கியதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறமுடியாமல் லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ரவூப் பங்கேற்காமல் தொடரிலிருந்து விலகினார்.

அதேசமயம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக்பேஷ் லீக் T20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். இதனால் பாகிஸ்தான் அணி அனுபமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றதுடன், அத்தொடரில் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியையும் சந்திதது.

இதில் ஹாரிஸ் ரவூப் இந்த தொடரின் அணித்தேர்வுக்கு முன்னதாக கடைசி நேரத்தில் பனிச்சுமையால் தன்னால் பங்கேற்க முடியாது என விலகினார்.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்க மறுத்தது. மேலும் அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இந்த விசாரணையின்போதும் ஹரிஸ் ரவூப்பின் பதில் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு திருப்திகரமாக இல்லை. எனவே அவரது மத்திய ஒப்பந்தத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூன் 30ஆம் திகதி வரை எந்தவொரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாடுவதற்கான தடையில்லா சன்றிதழ் (NOC) அவருக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு, ஹாரிஸ் ரவூப்பின் மத்திய ஒப்பந்தம் 2023 டிசம்பர் முதலாம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது, மேலும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாடுவதற்கு தடையில்லா சான்றிதழும் (NOC) எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை அவருக்கு வழங்கப்படாது என்பதை அறிவிக்கிறோம்.

மேலும், ஹரிஸ் ரவூப்பிற்கு தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு ஜனவரி 30ஆம் திகதி வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அந்த விசாரணையின் முடிவில் ஹாரிஸ் ரவூப்பின் பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எந்தவொரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருக்கும் தன் நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் எந்தவொரு மருத்துவ அறிக்கையும் அல்லது நியாயமான காரணமும் இல்லாத நிலையில் பாகிஸ்தானின் டெஸ்ட் அணியில் இடம் பெற மறுப்பது என்பது மத்திய ஒப்பந்தத்தை மீறுவதாகும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹாரிஸ் ரவூப் இனி தனது தடைக்காலம் முடிவும் வரை எந்தவொரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் பங்கேற்க முடியாது. அதேசமயம், அவர் நடப்பாண்டு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடருக்கான லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<