விம்பில்டன், யுனைடட் கழகங்களுக்கிடையிலான போட்டி சமநிலையில்

451
Wimbledon sc VS UNITED SC 26TH MATCH REPOT

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக் -2017” போட்டிகளின் 26ஆவது லீக் ஆட்டம் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலுள்ள புத்தளப் பிரதேசத்தின் தலை சிறந்த கழகங்களான விம்பில்ட்டன் மற்றும் யுனைடட் ஆகிய கழகங்களுக்கிடையில் இடம் பெற்றது.

இரு கழகங்களினதும் கோல் முயற்சிகள் தோல்வியில் முடிய விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டி, கோல்கள் ஏதும் பெறப்படாத நிலையில் சமநிலையில் நிறைவுபெற்றது.

போட்டி ஆரம்பித்த முதலாவது நிமிடத்திலேயே விம்பில்டன் வீரர் ஜெஸான் கொடுத்த பந்தினை ஸப்ரின் கம்பம் நோக்கி அடிக்க அதை ஹஸான் இலகுவாக நெஞ்சேடு அணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் ஸப்ரின் மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து வேகமாக கொண்டு சென்ற பந்தினை கம்பத்தின் வலப் பக்கத்தினூடாக அடிக்க சிறப்பாகச் செயற்பட்ட ஹஸான் கோல் வாய்ப்பினை தடுத்து நிறுத்தினார்.

போட்டியின் 15 நிமிடங்கள் கடந்த நிலையில் யுனைடட் வீரர் ரம்ஸின் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தினை இர்ஸாத் பெற்று பந்தை கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்தின் இடப்புறமாய் வெளியேற அவரது முயற்சியும் வீணானது.

ஆட்டத்தின் போக்கு சற்று உக்கிரமடைய இரு கழகங்களினதும் தடுப்பு வீரர்கள் வேகமாக ஆடத் தொடங்கினர். இதனால் முன்கள வீரர்கள் கோலுக்காக பெரிதும் போராட வேண்டி ஏற்பட்டது.

28ஆவது நிமிடத்தில் விம்பில்டன் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஜெஸான் பொறுப்பேற்று உயர்த்தி அடிக்க பந்து கம்பத்தில்பட்டவாறே வெளியேற கோல் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு விம்பில்டன் அணிக்கு கைநழுவிப்போனது.

மீண்டும் 35ஆவது நிமிடத்தில் ஜரீத் கொடுத்த பந்தை இர்ஸாத் பெற்று இரண்டு தடுப்பு வீரர்களையும் கடந்து சென்று அடிக்க அது கோல் காப்பாளர் இம்ரானின் கைகளுக்குள் சிக்கியது. இதனால் யுனைடட் அணியின் கோல் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது.

பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளன தொடரின் லீக் சுற்று முடிவுகள் 

முதல் பாதியின் மேலதிக நேரத்தின் இறுதி முயற்சியாக விம்பில்டன் கழகத்திற்கு கோர்ணர் உதை கிடைத்தது. அதை ஸனீர் உயர்த்தி உதைக்க சிறப்பாகச் செயற்பட்ட ஹஸான் உயர எழுந்து பந்தை கையால் குத்தி விட முதல் பாதியின் இறுதி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

முதல் பாதி: விம்பில்டன் விளையாட்டுக் கழகம்  0  –  0  யுனைடட் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்தில் யுனைடட் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஜனோஸன் உயர்தி அடிக்க பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

மேலும் 8 நிமிடங்கள் கழிந்த நிலையில் விம்பில்டன் கழகத்திற்கு கோர்ணர் உதை கிடைக்க, அதனை ஸப்ரின் உயர்தி அடிக்க ஸிப்ரான் உயரே எழுந்து தலையால் முட்டி கம்பம் நோக்கி திருப்ப பந்து கம்பத்தின் மேலால் சென்றது.

அதற்கு அடுத்த நிமிடமே யுனைடட் கழகத்தின் வீரர் ஜர்கின் கொடுத்த நேர்த்தியான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற இர்ஸாத் எதிரணியின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கம்பங்களை நோக்கி அடிக்க, அதனை கோல் காப்பாளர் இம்ரான் தன் கையால் தட்டி இலகுவான கோல் வாய்ப்பை சிறப்பாக தடுத்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் நஸ்றூன் கொடுத்த பந்தை ஸிஸான் பெற்று மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து யுனைடட்டின் தடுப்பு வீரர்கள் மூவரையும் தாண்டி பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க, பந்து கம்பத்தின் மேலால் செல்ல சிறப்பான முயற்சி பயனில்லாமல் போனது.

மேலும் 65ஆவது நிமிடத்தில் நிப்ராஸ் கொடுத்த பந்தை சிப்ரான் பெற்று சற்று தூரத்திலிருந்து வேகமாக அடிக்க நேரே வந்த பந்தை கோல் காப்பாளர் ஹஸான் இலகுவாகப் பற்றிக் கொண்டார்.

போட்டி இறுதிக் கட்டத்தை அடைய இரு கழகங்களினதும் ஆதரவாளர்களின் சத்தங்கள் ஸாஹிரா கல்லூரி மைதானத்தை அதிரச்செய்தது.

73ஆவது நிமிடத்தில் யுனைடட் கழகத்தின் ஹூஸைன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை வேகமாகச் செயற்பட்டு இர்ஸாத் பெற்றுக் கொண்டு விம்பில்டனின் தடுப்பு வீரர்களை நிலை குலையச் செய்து கம்பம் நோக்கி உயரமாக உதைத்து விட பந்து கம்பத்தின் மேல் பகுதியில்பட்டவாறே வெளிச் செல்ல அற்புதமான முயற்சியும் வீணாகியது.

மூன்றரை வருடங்களின் பின் சம்பியனாகியது சென். நிக்கிலஸ்

இரு கழகங்களினதும் தடுப்பு வீரர்களும் இறுதி நிமிட போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த நிலையில் காணப்பட்டனர். வெற்றி கோல் அடிப்பதற்காக இரு கழக முன் கள வீரர்களும் மிகுந்த முயற்சியில் ஈடுபட்டும் அனைத்துமே தோல்வியில் முடிந்தது.

ஆட்டத்தின் இறுதி முயற்சியாக ஜெனூஸன் கொடுத்த உயரமான பந்தை பெற்ற ஜர்க்கின் இலகுவாக வலது காலால் தட்டி இர்ஸாத்திடம் கொடுக்க அதை இர்ஸாத் கம்பங்களை நோக்கி உள்ளனுப்பினார். எனினும் கோல் காப்பாளர் இம்ரானின் சிறப்பான கோல் தடுப்பு மூலம் இறுதி நிமிட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க, இரு அணிகளும் எவ்வித கோலும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவு பெற்று இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

முழு நேரம்: விம்பில்டன் விளையாட்டுக் கழகம்  0  –  0  யுனைடட் விளையாட்டுக் கழகம்

மஞ்சள் அட்டை

யுனைடட் விளையாட்டுக் கழகம் – இர்ஸாத் 11’, இம்திகார் 21’

விம்பில்டன் விளையாட்டுக்  கழகம் – சிப்ரான் 40’, ஸப்ரின் 73’