கிரிக்கெட் போட்டிகளின் நிலவரம் – செப் 30

401

கிரிக்கெட் உலகில் நேற்று 3 போட்டிகள் இடம்பெற்றன. இதில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தமது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. அதேவேளை அவுஸ்திரேலிய அணி தென் ஆபிரிக்க அணிக்கெதிரான 1ஆவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியோடு  1ஆவது ஒருநாள் போட்டியிலும் விளையாடின.

இந்தியா எதிர் நியூசிலாந்து : 2ஆவது டெஸ்ட் போட்டி

இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. லோகேஷ் ராகுலுக்குப் பதில் ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டைப் போலவே 4 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கியது.

நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைவர்  பொறுப்பு டெய்லருக்கு வழங்கப்பட்டது. வில்லியம்சனுக்குப் பதில் ஹென்றி நிக்கோல்ஸ் சேர்க்கப்பட்டார். கான்பூர் டெஸ்ட்டில் இடம்பிடித்திருந்த மார்க் கிரேக், சோதி ஆகியோருக்கு பதில் ஜிதன் பட்டேல், மெட் ஹென்றி ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.  தவான் ஒரு ஓட்டங்களை  மட்டுமே எடுத்த நிலையில் ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் முரளி விஜயுடன் புஜாரா இணைந்து நிதானமாக விளையாடினார். ஆனால், மறுமுனையில் முரளி விஜய் 9 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில், விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவுடன் தலைவர் கொஹ்லி  இணைந்தார்.

ஆனால், 9 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில் கொஹ்லி ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 46  ஓட்டங்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4ஆவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். இருவரும் அபாரமாக விளையாடி அரைச்சதம் அடித்தனர்.

இந்தியாவின் மொத்த ஓட்டங்கள்  187 ஆக  இருக்கும் போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 87 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களைப் பகிர்ந்து. புஜாரா ஆட்டம் இழந்த பின்  ரோஹித் சர்மா களம் இறங்கினார். இவர் 2 ஓட்டங்களை  எடுத்த நிலையில் ஜிதம் படேலின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரஹானே 77 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார். இதன்மூலம் இந்தியா 14 ஓட்டங்களுக்குள்  3 விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து வந்த அஷ்வின் 33 பந்துகளில் 26 ஓட்டங்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். 8ஆவது விக்கெட்டுக்கு சகாவுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 86 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ஓட்டங்களை எடுத்திருக்கும் போது வெளிச்சம் குறைவின் காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

சகா 14 ஓட்டங்களோடும், ஜடேஜா ஓட்டம் எதுவும்  எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 239/7 – புஜாரா 87, ரஹானே 77, அஷ்வின் 26, மெட் ஹென்றி 26/3, ஜீதன் பட்டேல் 66/2


தென் ஆபிரிக்கா  – அவுஸ்திரேலியா : 1ஆவது ஒருநாள் போட்டி

தென் ஆபிரிக்கா  – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 1ஆவது போட்டி நேற்று ஆரம்பமானது.

செஞ்சூரியனில் தொடங்கிய முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானம் செய்தது. அதன்படி அவுஸ்திரேலிய அணியின் வோர்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வோர்னர் 36 பந்துகளில் 40 ஓட்டங்களையும், பிஞ்ச் 28 பந்துகளில் 33 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த தலைவர்  ஸ்மித் 8 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்து  ஏமாற்றம் அளித்தார். அதன் பின் வந்த பெய்லி 74 ஓட்டங்களையும், மார்ஷ் 31 ஓட்டங்களையும், வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்டிங் 51 ஓட்டங்களையும் எடுக்க அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ஓட்டங்களைக் குவித்துள்ளது. தென் ஆபிரிக்க அணி சார்பில்  பந்து வீச்சில் அதிகபட்சமாக வெலுக்வாயோ 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அவரோடு ஸ்டெய்ன் 2 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பதிலுக்கு 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென் ஆபிரிக்க அணி 36.2 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டும் இழந்து 295 ஓட்டங்களைப் பெற்று 82 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் ஆரமபத் துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் மிக மிக அபாரமாக ஆடி 113 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கலாக 178 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர ரிலி ரூசோ 63 ஓட்டங்களையும், பெப் டுப் லசிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பொலன்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 294/9 (50) ஜோர்ஜ் பெய்லி 74, ஜோன் ஹேஸ்டிங்ஸ் 51, டேவிட் வோர்னர் 40, எண்ட்லி வெலுக்வாயோ 44/4, டேல் ஸ்டெய்ன் 65/2

தென் ஆபிரிக்கா – 295/4 (36.2) குயின்டன் டி கொக் 178, ரிலி  ரூசோ 63, டுப்ளசிஸ் 26, பொலன்ட் 67/3

தென் ஆபிரிக்க அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி


பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் : 1ஆவது ஒருநாள் போட்டி

பாகிஸ்தான்மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 1ஆவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தலைவர்  அசார் அலி மற்றும் ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே அசார் அலி ஆட்டம் இழந்து  வெளியேறினார்.

அடுத்து பாபர் அசாம் ஷர்ஜில் கான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் பிரமாதமாக விளையாடினார்கள். ஷர்ஜில் கான் 43 பந்துகளில் 54 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபர் அசாம் அருமையாக ஆடி 131 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 120 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன்பின் வந்த டி20 அணியின் தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளர் சர்பிராஸ் அஹமத் 35 ஓட்டங்களையும், இமாத் வாசிம் 24 ஓட்டங்களையும், சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்களைக் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் கார்லோஸ் பரத்வயிட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 45ஆவது ஓவரின் போது மின்சாரம் தடைப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டது.

பின்னர் 49 ஓவர்களில் 285 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. ஆனால்  மேற்கிந்திய தீவுகள் அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவெல்ஸ் 46 ஓட்டங்களையும், சுனில் நரேன் 23  ஓட்டங்களையும், ஜொன்சன் சார்ல்ஸ் 20  ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் முஹமத் நவாஸ் 4 விக்கெட்டுகளையும், ஹசன் அலி  3  விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதன்படி பாகிஸ்தான் அணி இந்த 1ஆவது ஒருநாள் போட்டியில் டக்வத் மற்றும் லுயிஸ் முறையில் 111 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 284/9 (49) – பாபர் அசாம் 120, சர்ஜீல் கான் 54, சர்ப்ராஸ் அஹமத் 35, கார்லோஸ் பரத்வயிட் 54/3

மேற்கிந்திய தீவுகள் அணி – 175/10 (38.4) – மார்லன் சாமுவெல்ஸ் 46 , சுனில் நரேன் 23, ஜொன்சன் சார்ல்ஸ் 20, முஹமத் நவாஸ் 42/4,  ஹசன் அலி 14/3

பாகிஸ்தான் அணி 111 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறையில்)