அமெரிக்காவில் மீண்டும் உஷான் திவங்க முதலிடம்

NCAA Division II Outdoor Track & Field Championships 2022

28
 

அமெரிக்காவில் நடைபெற்ற NCAA Division II Outdoor Track & Field Championships 2022 போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் உஷான் திவங்க உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

சனிக்கிழமை காலை (28) அமெரிக்காவின் GRAND VALLEY பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட உஷான், 2.22 மீட்டர் உயரம் தாவி முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் NCAA Division II பிரிவின் தேசிய சம்பியனாகவும் அவர் தெரிவாகினார்.

அமெரிக்காவில் உயர் கல்வியுடன் மெய்வல்லுனர் விளையாட்டுக்கான பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்ற 24 வயதான உஷான் திவங்க, கடந்த ஆண்டு, உயரம் பாய்தலில் 2.30 மீட்டர் உயரத்தைப் பதிவுசெய்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க பல்கலைக்கழக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற உஷான் திவங்க, பல வெற்றிகளையும், சிறந்த வீரருக்கான விருதுகளையும் தட்டிச்சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, அண்மைக்காலமாக உயரம் பாய்தலில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக, இந்த ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப்  பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, குறித்த போட்டியில் 2.19 மீட்டர் உயரத்தைத் தாவிய Nishorn Pierre இரண்டாவது இடத்தையும், 2.16 மீட்டர் உயரத்தைப் பதிவுசெய்த Eli Kosiba மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதனிடையே, அமெரிக்காவின் West Texas A&M பல்கலைக்கழகம் சார்பில் குறித்த போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் கனிஷ்ட மெய்வல்லுனரான செனிரு அமரசிங்க, 2.02 மீட்டர் உயரத்தைத் தாவி திறமைகளை வெளிப்படுத்தினார்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<