100 மீட்டர் தெற்காசிய சாதனையை மீண்டும் புதுப்பித்தார் யுபுன்

75
 

ஜேர்மனியின் டெஸாவு நகரில் நேற்று (25) நடைபெற்ற International Athletics Meeting Anhalt 2022 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.06 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த தெற்காசிய சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்தார்.

அதேபோல, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆசிய நாட்டு வீரர் ஒருவரால் 100 மீட்டரில் பதிவுசெய்த அதிசிறந்த காலப்பெறுமதியாகவும் இது இடம்பிடித்தது.

முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றை 10.30 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பிடித்த யுபுன், இறுதிப்போட்டியை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம், கடந்த ஆண்டு இதே போட்டித் தொடரில் பங்குகொண்டு அவர் நிலைநாட்டிய 10.15 செக்கன்கள் என்ற தெற்காசிய மற்றும் இலங்கை சாதனைகளை மீண்டும் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, எதிர்வரும் ஜுலை மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்;றுவதற்கான அடைவுமட்டத்தை 0.01 செக்கன்களினால் அவர் துரதிஷ்டவமசமாக தவறவிட்டார்.

இதனிடையே, யுபுன் பங்குகொண்ட குறித்த போட்டியில் இரண்டாவது இடத்தை கென்ய நாட்டவரான ஒமான்லாயா பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு 9.77 செக்கன்களில் 100 மீட்டரை ஓடிமுடித்து ஆபிரிக்காவின் அதிவேக வீரராக சாதனை படைத்த இவர், உலகின் 8ஆவது அதிவேக வீரராகவும் வலமவ்ருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2022 பருவகாலத்திற்கான மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகியது முதல் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகின்ற யுபுன், இத்தாலியில் கடந்த 18ஆம் திகித நடைபெற்ற Savona International 2022 போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.04 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட +2.3 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரப் பெறுமதி இலங்கை சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை.

மாறாக, குறித்த நேரப் பெறுமதியானது இலங்கை வீரர் ஒருவரினால் எந்தவொரு காலநிலையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிசிறந்த தூரமாக இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இத்தாலியில் கார்லோ ஸெக்சினி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 12ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய இலங்கை சாதனையையும் தெற்காசிய சாதனையையும் இலங்கையின் யுபுன் அபேகோன் நிலைநாட்டினார்.

Serie A பிரிவில் 200 மீட்டர் போட்டி தூரத்தை 20.37 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தார். அத்துடன் இந்த நேரப் பெறுமதி போட்டி சாதனையாகவும் பதிவாகியது.

SerieA மற்றும் Serie B ஆகிய 2 பிரிவுகளில் நடத்தப்பட்ட 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தலா 7 வீரர்கள் பங்குபற்றியதுடன், ஒட்டுமொத்த நிலையில் யபுன் அபேகோன் முதலிடத்தைப் பிடித்தார்.

பன்னல தேசிய கல்லூரியில் இருந்து மெய்வல்லுனர் விளையாட்டில் காலடிவைத்த யுபுன் அபேகோன், அதன்பிறகு வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியில் இணைந்தார். எனவே, தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் ஒன்றின் மூலம் இத்தாலிக்குச் சென்று பயிற்சிகளைப் பெற்றார்.

இதன்பிரதிபலனாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிடுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். எவ்வாறாயினும், இந்த ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் 2023இல் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கு யுபுன் அபேபோன் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<