ஏலத்தில் வாங்கப்படாத ஜேசன் ரோய் IPL இல் இணைகிறார்

185

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜேசன் ரோயினை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் ஜேசன் ரோய் 2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆடவிருக்கின்றார்.

ஒருநாள் உலகக் கிண்ணத்தை தவறவிடும் கேன் வில்லியம்சன்

ஜேசன் ரோய் இந்த ஆண்டுக்கான IPL தொடரின் வீரர்கள் மினி ஏலத்தில் இந்திய நாணயப்படி 1.5 கோடி ரூபாய்களுக்கு ஏலம் கோரப்பட்டிருந்தார். எனினும், அவர் ஏலத்தில் எந்த அணிகள் மூலமும் கொள்வனவு செய்யப்பட்டிருக்கவில்லை.

எனினும், தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஒப்பந்தத்தினைப் பெற்றிருக்கும் அவர் குறித்த ஒப்பந்தம் மூலமாக இந்திய நாணயப்படி 2.8 கோடி ரூபாய்களைப் (இலங்கை நாணயப்படி சுமார் 110 மில்லியன் ரூபாய்கள்) பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் இருந்து விலகிய நிலையில் இந்த வீரர்களின் பிரதியீடாகவே ஜேசன் ரோய்க்கு கொல்கத்தா அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

ஜேசன் ரோய் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு IPL போட்டிகளில் ஆடியிருந்ததோடு, குறித்த பருவத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி 5 போட்டிகளில் ஒரு அரைச்சதம் அடங்கலாக 150 ஓட்டங்கள் எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய கிரிக்கெட் பயிற்சியாளரை நியமிக்கும் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம்

இதேநேரம், இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 64 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் ரோய், அதில் 137 இற்கு கிட்டவான ஓட்ட வேகத்துடன் 1522 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தப் பருவத்திற்கான IPL தொடரின் தமது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியினைத் தழுவிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ், தமது அடுத்த போட்டியில் வியாழக்கிழமை (06) ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினை எதிர்கொள்கின்றது.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<