ரவிந்து மற்றும் ஹரீன் அசத்தல் : புனித அலோசியஸ் கல்லூரி அபார வெற்றி

215
Ravindu Sanjana

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுக்கான போட்டியில் குருகுல கல்லூரியை தோற்கடித்த புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. அதேவேளை, தர்ஸ்டன் கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்ததுடன், முதல் இன்னிங்ஸ் வெற்றியை தர்ஸ்டன் கல்லூரி பெற்றுக் கொண்டது.

குருகுல கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின்போது புனித அலோசியஸ் கல்லூரி 1 விக்கெட்டை இழந்து 22 ஓட்டங்களை பெற்றிருந்தது. மேலும் 209 ஓட்டங்கள் பெற்றால் முதல் இன்னிங்ஸ் வெற்றி என்ற நிலையில் இன்றைய நாள் களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தனது அற்புதமான துடுப்பாட்டத்தின் மூலம் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்ற ரவிந்து சஞ்சன 159 ஓட்டங்களை குவித்து அசத்தினார். நவிந்து நிர்மால் 41 ஓட்டங்களையும், அஷென் பண்டார 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, புனித அலோசியஸ் கல்லூரி 69.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர், 110 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த குருகுல கல்லூரிக்கு, புனித அலோசியஸ் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர். அருமையாக பந்து வீசிய ஹரீன் புத்தில 30 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்க்க, குருகுல கல்லூரி 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் பிரவீன் நிமேஷ் 20 ஓட்டங்களையும் லசிந்து அரோஷ 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். கவித டில்ஷான் 05 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி புனித அலோசியஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 34 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

ஏற்கனவே, முதலில் துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி 83.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதன்போது, உதார ரவிந்து 80 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் நிதுக மல்சித் 5 விக்கெட்டுகளை  வீழ்த்தினார்.

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 230 (83.1) – உதார ரவிந்து 80, அஷிந்த மல்ஷான் 47, துமிந்த சுதாரக 34, நிதுக மல்சித் 5/27, ஹரீன் புத்தில 3/80

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 340/6d (69.4) – ரவிந்து சஞ்சன 159, நவிந்து நிர்மால் 41, அஷென் பண்டார 37

குருகுல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76 (30) – பிரவீன் நிமேஷ் 23, லசிந்து அரோஷ 21, ஹரீன் புத்தில 6/30, கவித டில்ஷான் 2/05


தர்ஸ்டன் கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் இரண்டாம் நாள் தொடங்கும் வேளையில் புனித பெனடிக்ட் கல்லூரி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 214 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் களமிறங்கினர்.

அபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட மஹேஷ் தீக்ஷண புனித பெனடிக்ட் கல்லூரிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்கு பங்களிப்பை வழங்கிய கவீஷ ஜயதிலக்க 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, புனித பெனடிக்ட் அணியினர் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர்.

தனித்து போராடிய மஹேஷ் தீக்ஷண 100 ஓட்டங்களைக் குவித்தார். தர்ஸ்டன் கல்லூரி சார்பாக நிபுன் லக்ஷான் மற்றும் சரண நாணயக்கார தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி போட்டி நிறைவுறும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷவின் பிரபாஸ் 30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பிரகீஷ மெண்டிஸ் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கவீஷ ஜயதிலக்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்படி போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன் முதல் இன்னிங்ஸ் வெற்றியை தர்ஸ்டன் கல்லூரி பெற்றுக் கொண்டது.

முன்னர், முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தர்ஸ்டன் கல்லூரி, 61 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ஷவின் பிரபாஸ் 75 ஓட்டங்களையும் நிபுன் லக்ஷான் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், ரிஷான் கவிஷ்க 46 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 256/8d (61) – ஷவின் பிரபாஸ் 75, நிபுன் லக்ஷான் 62, நிமேஷ் லக்ஷான் 24, ரிஷான் கவிஷ்க 4/46, சமிந்த விஜேசிங்க 2/35

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 193/10 (70) – மஹேஷ் தீக்ஷண 100, கவீஷா ஜயதிலக்க 39, தினித்த பஸ்நாயக்க  25, சரண நாணயக்கார 3/39, நிபுன் லக்ஷான்3/40

தர்ஸ்டன் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 83/2 (21.3) – ஷவின் பிரபாஸ் 30, பிரகீஷ மெண்டிஸ் 20*, கவீஷ ஜயதிலக்க 2/29