இலங்கைக்கு பிஃபா மூலம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள்

103

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  கால்பந்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவுவதற்காக, உதவித் தொகையாக 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை பிஃபா இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு வழங்கவுள்ளது. 

இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பிஃபா, சர்வதேசத்தில் கால்பந்துடன் தொடர்புடைய 211 நாடுகளுக்கு, 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மீண்டும் துளிர்விடும் கால்பந்து!

கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கிப்போன சர்வதேச கால்பந்து …

பிஃபா அங்கத்துவத்தை பெற்றுள்ள நாடுகளின் கால்பந்து செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதியினை ஒதுக்கும் 2.0 திட்டத்துக்கான 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான நிதி விடுவிக்கப்படவுள்ளது. 2020ம் ஆண்டுக்கான நிதி எதிர்வரும் ஜூலை மாதம் விடுவிக்கப்படவிருந்த போதும், உடனடியாக அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பிஃபா அங்கத்துவ சங்கம், வழங்கப்படும் நிதியினை அங்கத்துவ உரிமைகளுக்கு ஏற்ப முழுமையாக பெற்றுக்கொள்ளும் என்பதுடன், இந்த நிதியானது கால்பந்தினை பாதுகாக்கும் முகமாக வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியினை கொவிட்-19 காரணமாக நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ள நாடுகள் பயன்படுத்த முடியும். அதன்படி, கால்பந்தினை பாதுகாக்கும் முகமாக கால்பந்து சம்மேளனங்கள் அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கு இதனைப் பயன்படுத்த முடியும் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த திட்டத்திற்கு அமைய இலங்கை கால்பந்து சம்மேளனமானது, பிஃபாவிடம் இருந்து 9 கோடி 32 இலட்சம் ரூபாவினை பெறவுள்ளது. குறித்த நிதியினை இலங்கை கால்பந்து சம்மேளம் அன்றாட தேவைகள் மற்றும் முகாமைத்துவ தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிதி தொடர்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா கருத்து வெளியிடுகையில், 

“பிஃபாவிடம் கொவிட்-19 உதவி தொகையாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை  வழங்க வேண்டும் என கேட்டிருந்தோம். குறித்த தொகையை எமது அங்கத்துவ லீக் அணிகள், கழக வீரர்கள், நடுவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், முன்னாள் தேசிய வீரர்கள், முன்னாள் நடுவர்கள் என கொவிட்-19 வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கவுள்ளோம்.

கொவிட்-19 உதவி திட்டத்துக்கு அமைய, கடந்த வருடத்தில் நடைபெற்ற தொடர்களின் அடிப்படையில் நிதியினை வழங்க முடியும். எனினும், கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் தொடர்கள் நடத்தப்படவில்லை. பின்னரும், சீரற்ற காலநிலை காரணமாக தொடர்கள் பிற்போடப்பட்டிருந்தன. 

இதேநேரம், பிஃபா வழங்கவுள்ள நிதி, முதற்கட்டமாக எதிர்வரும் 12 மற்றும் 13ம் திகதிகளில் கிடைக்கப்பெறவுள்ளதுடன், இரண்டாவது பாதி நிதி ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப்பெறும்” என குறிப்பிட்டார்.

இதேவேளை லீக் மற்றும் லீக் அணிகளுக்கு வழங்கப்படவுள்ள நிதி தொடர்பில் குறிப்பிடுகையில், “டிவிஷன் ஒன்று மற்றும் டயலொக் சம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும் நிதி வழங்கப்படவுள்ளது. அதன்படி, லீக் ஒன்றுக்கு ஒரு இலட்சம் தொடக்கம் 3 இலட்சம் வரையும் 54 கழகங்களுக்கும் நிதி வழங்கப்படவுள்ளது.  

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் 17 அணிகளுக்கும் தலா  3 இலட்சம் வழங்கப்படவுள்ளது. அத்துடுடன் டிவிஷன் ஒன்றுக்கான கழகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பதுடன், வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நடுவர்களுக்கும் உதவித் தொகைகள் வழங்கப்படவுள்ளது. 

அதுமாத்திரமின்றி இலங்கை மகளிர் தேசிய அணி மற்றும் U19 அணிகளின் குடும்பங்களுக்கும் உதவி தொகைகள் வழங்கப்படவுள்ளதுடன், நாட்டின் பொது மக்களுக்காகவும் நிதியினை வழங்கவுள்ளோம்” எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கால்பந்து செய்திகளை படிக்க…