இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தேர்தலில் சிறிது தாமதம்

680

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) சரியான ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி அவர்களின் நிர்வாகத் தெரிவுக்கான தேர்தலை ஏற்பாடு செய்யவில்லை என இலங்கையின் புதிய விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சனம் எழுப்பியிருப்பதால், இந்த தேர்தல் இடம்பெறுவதில் சிறு கால தாமதம் ஏற்பாடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால முன்னர் தெரிவித்திருந்தார்.  எனினும், புதிய விளையாட்டுத்துறை அமைச்சரின் விமர்சனத்தினால் இந்த தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் இடம்பெற எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி திலங்க சுமதிபால மற்றும் அவர் சார்பிலான நிர்வாக குழுவினரின் பதவிக்காலம் மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த போதிலும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அவர்களே தொடர்ந்து தற்காலிக நிர்வாகிகளாக இருக்க விளையாட்டு அமைச்சரினால்  பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் அனுப்பியிருந்த கடிதத்தில், இந்நாட்டின் விளையாட்டுச் சட்டத்தின்படி “தேர்தல் முகாமைத்துவக் குழு“   விஷேட கூட்டம் ஒன்று நடாத்தி அதில் இலங்கை கிரிக்கெட் சபையின் அங்கத்தவர்கள் ஒப்புதல்களைப் பெற்ற பின்னரே தெரிவு செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு 

ஆனால் இந்த தேர்தலுக்கான முகாமைத்துவக் குழு இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கான சந்திப்பு ஒன்றின் போது தெரிவு செய்யப்பட்டிருந்தது. தற்போதைய விளையாட்டு அமைச்சு இத்தேர்தல் முகாமைத்துவக் குழுத் தெரிவை செல்லுபடியற்றதாகக் கருதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் பெறுவதை நிறுத்துமாறும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கட்டளையிட்டுள்ளது.

இப்படியான காரணங்களினால் தாமதாகும் தேர்தலை விரைவில் நடாத்த, இலங்கை கிரிக்கெட் சபையினர், தேர்தல் முகாமைத்துவக் குழுவை தெரிவு செய்யும் விஷேட கூட்டத்தினை ஏற்பாடு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு நிலைமைகள் அனைத்தும் சீராகி இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத் தேர்தல் இடம்பெறுகின்ற வரைக்கும் திலங்க சுமதிபால தலைமையிலான நிர்வாகம் தற்காலிகமாக பதவியிலிருக்கவுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால, நிஷாந்த ரணதுங்க, மோஹான் டி சில்வா மற்றும் ஜயந்த தர்மதாச ஆகியோர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்ததாக ThePapare.com இற்கு அறியக் கிடைக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய நிர்வாகம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டது. இதில் அர்ஜுன ரணதுங்க தரப்பை எதிர்கொண்ட திலங்க சுமதிபால தலைமையிலான அணியினர் வெற்றிபெற்று பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர்.