நடப்பு சம்பியனை வீழ்த்திய ஜெர்மனி; பிரான்ஸ், ஸ்பெயினுக்கு அதிர்ச்சி முடிவு

UEFA EURO 2020

149

யூரோ 2020 கால்பந்து தொடரில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற F குழுவுக்கான போட்டிகளில் பிரான்ஸ் அணி ஹங்கேரியிடம் அதிர்ச்சி முடிவைப் பெற்றதுடன், நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணியை  ஜெர்மனி இலகுவாக வீழ்த்தியது. 

E குழுவுக்காக போலந்து – ஸ்பெயின் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற அடுத்த போட்டி சமநிலையில் முடிந்தது. 

ஹங்கேரி எதிர்  பிரான்ஸ்  

ஹங்கேரியின் பிரென்க் பஸ்கஸ் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், தொடரின் முதல் போட்டியில் பலம் மிக்க ஜெர்மனியை 1-0 என வெற்றி கொண்ட உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் பிரான்ஸ் அணிக்கு ஹங்கேரி முதல் பாதி நிறைவடையும்போது அதிர்ச்சி கொடுத்தது. 

முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் சல்லை வழங்கிய பந்தின்மூலம், எதிரணியின் கோல் எல்லையில் வைத்து ஹங்கேரி பின்கள வீரர் Attila Fiola போட்டியின் முதல் கோலைப் பெற்றார். 

ரொனால்டோவுக்கு இரட்டை கோல்; ஜெர்மனியை வீழ்த்திய பிரான்ஸ்

பின்னர் இரண்டாம் பாதியில் முதல் கோலுக்காகப் போராடிய பிரான்ஸ் அணிக்கு, அதன் தலைவர் அன்டோனி கிறீஸ்மன் 66ஆவது நிமிடத்தில் சிறந்த ஒரு கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார். எஞ்சிய நேரத்தில் பிரான்ஸ் வெற்றி கோலுக்காகப் போராடிய போதும் அவை எதுவும் பயனளிக்கவில்லை. 

எனவே, அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் ஆட்டம் 1-1 என சமநிலையடைய, குழு F இரண்டாவது வெற்றியைப் பெறும் பிரான்ஸ் அணியின் எதிர்பார்ப்பு வீணானது.  

முழு நேரம்: ஹங்கேரி 1 – 1 பிரான்ஸ்

கோல் பெற்றவர்கள் 

  • ஹங்கேரி – Attila Fiola 45+2’
  • பிரான்ஸ் –  அன்டோனி கிறீஸ்மன் 66

போர்த்துக்கல் எதிர் ஜெர்மனி 

2016ஆம் அண்டு யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த போட்டியாக அமைந்தது. 

ஜெர்மனியின் அல்லியன்ஸ் அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 12 நிமிடங்களிலும் ஜெர்மனி மிக வேகமாக அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளைப் பெற்றது. இதன்போது பெறப்பட்ட முதல் கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.  

எனினும், 15ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கிய பந்தினை எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து நிறுத்திய ஜொடா, கோல் நோக்கி உதைந்த பந்து கோல் காப்பாளரின் தடுப்பில் பட்டு வர, அதனை ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்கான முதல் கோலாக மாற்றினார். இது ரொனால்டோ ஜெர்மனி அணிக்காக தனது கால்பந்து வாழ்வில் பெற்ற முதல்  கோலாகும்.  

பின்னர் தெடர்ந்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்ட ஜெர்மனி அணிக்கு அடுத்தடுத்து இரண்டு கோல்கள் ஓன் கோல் முறையில் கிடைத்தன. 

முதல் வாய்ப்பின்போது ருபென் டயஸின் காலில் பட்டு பந்து கோலுக்குள் செல்ல, அடுத்த 4 நிமிடங்களில் Raphaël Guerreiro இனால் பந்து ஓன் கோலானது. 

தொடர்ந்து 51ஆவது நிமிடத்தில் கொசென்ஸ் வங்கிய பந்தின்மூலம் கை ஹவேட்ஸ் ஜெர்மனி அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார். அடுத்த 9 நிமிடங்களில் கொசென்ஸ் சிறந்த ஒரு ஹெடர் மூலம் அடுத்த கோலைப் பெற, ஜெர்மனி அணி 3 கோல்களால் முன்னிலை பெற்றது. 

மீண்டும் 67ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது ரொனால்டோ வழங்கியை பந்தை ஜொடா கோலாக்கினார். 

அதன் பின்னர் போட்டியில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் போட்டி நிறைவில் 4-2 என ஜெர்மனி அணி யூரோ நடப்புச் சம்பியனை வீழ்த்தி தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த முடிவினால் குழு F இல் இருந்து நொக் அவுட் சுற்றுக்கு செல்லும் அணியை தீர்மானிக்கும் ஆட்டமாக அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இறுதி இரண்டு ஆட்டங்களும் மாறியிருக்கின்றன. 

முழு நேரம்: போர்த்துக்கல் 2 – 4 ஜெர்மனி

கோல் பெற்றவர்கள்   

  • போர்த்துக்கல் – ரொனால்டோ 15’, டியொகோ ஜொடா 67’
  • ஜெர்மனி – ருபென் டயஸ் 35’(OG), Raphaël Guerreiro 39’(OG), கை ஹவேட்ஸ் 35’, ரொபின் கொசென்ஸ் 60’ 

கால்பந்து உலகை கண்கலங்க வைத்த Christian Eriksen | Football Ulagam

ஸ்பெயின் எதிர் போலந்து 

சுவீடனுடனான தமது முதல் போட்டியை சமநிலையில் முடித்த ஸ்பெயின் அணியும், ஸ்லோவாக்கியா அணியுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்த போலந்து அணியும் மோதிய குழு E இற்கான இந்த மோதல் ஸ்பெயினின் De La Cartuja அரங்கில் இடம்பெற்றது. 

ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் மொரெனோ வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் மொராடா, ஸ்பெயின் அணிக்கான முதல் கோலைப் பெற்றார். 

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் சக வீரர் உயர்த்தி வழங்கிய பந்தை போலந்து அணித் தலைவர் லெவண்டொஸ்கி பாய்ந்து ஹெடர் செய்து கோலாக்கினார். 

எனினும், அடுத்த நிமிடம் மொரெனோ எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமை VAR சோதனையின்போது கண்டறியப்பட, ஸ்பெயின் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது மொரெனோ அடித்த பந்து இடது பக்க கம்பத்தில் பட்டு வர, மீண்டும் மொராடா உதைந்த பந்து வெளியே சென்றது. 

எனவே, நிறைவில் தலா ஒரு கோல்களுடன் போட்டி சமநிலையானது. இந்த முடிவினால் ஸ்பெயின் மற்றும் போலந்து அணிகள் குழு E இல் முறையே மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளன.  

முழு நேரம்: ஸ்பெயின் 1 – 1 போலந்து

கோல் பெற்றவர்கள்   

  • ஸ்பெயின் – மொராடா 25’
  • போலந்து – லெவண்டொஸ்கி 54’ 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<