சதீர, சந்துன் சதம் : போட்டிகளுக்கு மழையினால் இடையூறு

605
Tier A

இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஆறு போட்டிகள் இன்று ஆரம்பமாகின. எனினும் மழையின் குறுக்கீட்டினால் அனைத்து போட்டிகளிலும் குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்டன.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி BRC மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய கோல்ட்ஸ் அணி, சதீர சமரவிக்ரம மற்றும் ஹஷான் துமிந்து ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், ஹஷான் துமிந்து 72 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இவ்விருவரும் 2ஆவது விக்கெட்டிற்காக 169 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228/2 (63) – சதீர சமரவிக்ரம 119*, ஹஷான் துமிந்து 72 


SSC கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம்

SSC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இளம் வீரர்களான சம்மு அஷான் மற்றும் சரித் அசலங்க துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, அவ்வணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சம்மு அஷான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளதுடன், சரித் அசலங்க 66 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200/3 (53) – சம்மு அஷான் 80*, சரித் அசலங்க 66, அலங்கார அசங்க 2/70


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

புளூம்பீல்ட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை வழங்கிய மனோஜ் சரத்சந்திர (57) மற்றும் சித்தர கிம்ஹான் (46) ஆகியோர் முதல் விக்கெட்டிற்காக 101 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். மனோஜ் சரத்சந்திர அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தரங்க பரணவிதான ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார். அதன்படி தமிழ் யூனியன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை பெற்று இன்றைய தினத்திற்கான ஆட்டத்தை நிறைவுசெய்தது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 188/3 (49.3) – மனோஜ் சரத்சந்திர 57, சித்தர கிம்ஹான் 46, தரங்க பரணவிதான 41*, ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 2/77


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

இப்போட்டி சோனகர் கழக மைதானத்தில் ஆரம்பமானதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தொடக்க வீரர் இரோஷ் சமரசூரிய 85 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, செரசன்ஸ் அணியினர் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 179/3 (48) – இரோஷ் சமரசூரிய 85, மிலிந்த சிறிவர்தன 50, பிரமோத் மதுவந்த 2/44


NCC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

NCC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.

தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சந்துன்  வீரக்கொடி 104 பந்துகளில் 10 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 110 ஓட்டங்களை விளாசினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய எஞ்சலோ பெரேரா ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

எனினும் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, NCC அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்றிருந்தது. காலி கிரிக்கெட் கழகம் சார்பில் ஷாலிக கருணாநாயக்க மற்றும் ரொஷான் ஜயதிஸ்ஸ ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 237/7 (54.2) – சந்துன் வீரக்கொடி 110, எஞ்சலோ பெரேரா 63*, ஷாலிக கருணாநாயக்க 3/53, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/96


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி சர்ரே விலேஜ் மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகத்தின் தொடக்க வீரர்களான உதார ஜயசுந்தர (50) மற்றும் லஹிரு மிலந்த (64) ஆகியோர் அரைச்சதங்கள் கடந்த நிலையில் 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர்.

எனினும் மழையின் குறுக்கீட்டினால் 38 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்போது, ராகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 124/2 (38) – லஹிரு மிலந்த 64, உதார ஜயசுந்தர 50, லஹிரு கமகே 2/44

நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.