அபார சதம் கடந்த திலான் நிமேஷ் : ஜோசப், ஆனந்த கல்லூரிகள் வலுவான நிலையில்

408

இன்று ஆரம்பமாகிய, பாடசாலை அணிகள் மோதும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிங்கர் கிரிக்கெட் தொடரின் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை காண்பித்த புனித ஜோசப் கல்லூரி, பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி ஆகியவை முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது வலுப்பெற்றிருக்கின்றன.

புனித ஜோசப் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணியின் தலைவர் ஹரீன் கூரே முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, அவர்களின் அணி ஜெஹான் பெர்னாந்துப்புள்ளே (60), நிப்புன் சுமனசிங்க (56), பஹன பெரேரா(51) ஆகியோர் பெற்றுக்கொண்ட அரைச்சதங்களின் உதவியுடன் 9 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் வெஸ்லி கல்லூரிக்காக மொவின் சுபசிங்க, சகுந்த லியனகே ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.  

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த வெஸ்லி கல்லூரி அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களினை பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி: 268/9d (72.5), ஜெஹான் பெர்னாந்துப்புள்ளே 60, பஹான் பெரேரா 51, நிப்புன் சுமனசிங்க 56, மொவின் சுபஷிங்க 3/55, சகுந்த லியனகே 3/67

வெஸ்லி கல்லூரி: 57/2 (20), அஞ்சுல அக்மேன 29*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


புனித பேதுரு கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

இன்று ஆரம்பமாகிய மற்றுமொரு போட்டியில், புனித பேதுரு கல்லூரியும் ஆனந்த கல்லூரியும் மோதிக்கொண்டன. ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பான இப்போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த புனித பேதுரு கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி, எதிரணி பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 61.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 182 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.  

ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் தளம்பல் நிலையினை காட்டியிருந்த போதும், சலித் பெர்னாந்து தனது அணிக்காக நிதனமாக ஆடி, 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் சுபுன் வராகொட, திலீப ஜயலத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை ஆனந்த கல்லூரிக்காக பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் ஆனந்த கல்லூரி அணியினர் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். கவிந்து கிம்ஹான பெற்றுக்கொண்ட 73 ஓட்டங்களின் துணையுடன் அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது. இரண்டாவது இன்னிங்சின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த மொஹமட் அமீன் 3 விக்கெட்டுக்களை பேதுரு கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி: 182 (61.3), சலித் பெர்னாந்து 77, ரன்மித் ஜயசேன 45, சுப்புன் வராகொட 3/28, திலிப்ப ஜயலத் 3/50

ஆனந்த கல்லூரி: 122/5 (33), கவிந்து கிம்ஹான 73, மொஹமட் அமீன்  3/21

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

இன்று கந்தானை டி மெசனொட் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி அணி முதலில் துடுப்பாடியது.

எனினும் அவ்வணி, தினேத் பெர்னாந்துவின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 32.2 ஓவர்களில் 139 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சில் சுருண்டு கொண்டது. செபஸ்டியன் கல்லூரிக்காக ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சொதப்பிய நிலையில் இறுதிவரை தனித்துப் போராடியிருந்த தஷிக் பெரேரா 60 ஓட்டங்களினை ஆட்டமிழக்காமல் அணிக்காக பெற்றார்.

பந்து வீச்சில் இன்று தனது திறமையினை வெளிக்காட்டியிருந்த தினேத் பெர்னாந்து செபஸ்டியன் கல்லூரியின் 6 விக்கெட்டுக்களை வெறும் 20 ஓட்டங்களிற்கு பதம் பார்த்திருந்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த டி மெசனொட் கல்லூரி அணி, செபஸ்டியன் கல்லூரியின் நமுஷ்க டி சில்வாவின் பந்து வீச்சினால் ஆரம்பம் முதல் ஓட்டங்களை சேர்க்க தடுமாறியது. இருப்பினும் அவ்வணிக்காக ஓரளவு போராடிய மிதில டி சில்வா 39 ஓட்டங்களினை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

இதனால் குறைவான ஓட்டங்களுக்குள் சுருண்டு விடும் ஆபத்தினை எதிர்கொண்டிருந்த டி மெசனொட் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக 120 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது.

பந்து வீச்சில் அசத்தியிருந்த நமுஷ்க டி சில்வா செபஸ்டியன் கல்லூரி அணிக்காக 8 விக்கெட்டுக்களை 42 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து அபாரமாக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சினை போட்டியின் முதலாம் நாளிலேயே ஆரம்பித்திருந்த, புனித செபஸ்டியன் கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களினை இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 139 (32.2), தஷிக் பெரேரா 60*, அஷர் வர்ணகுலசூரிய 32, தினேத் பெர்னாந்து 6/20

டி மசனோட் கல்லூரி(முதல் இன்னிங்ஸ்): 120 (31), மிதில கீத் 39*, நாமுஷ்க டி சில்வா 8/42

புனித செபஸ்டியன் கல்லூரி(இரண்டாவது இன்னிங்ஸ்): 74/3 (21), நுவனிந்து பெர்னாந்து 28*

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி

இன்று மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, திலான் நிமேஷ் அபார சதம் கடந்து பெற்ற 111 ஓட்டங்களின் துணையுடன், 9 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டு தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

இன்றைய பந்து வீச்சில், டி. எஸ் சேனநாயக்க கல்லூரியிற்காக தொரின் பிடிகல, முதித லக்ஷன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய, டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணியினர், 3 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக  பெற்றுக்கொண்டிருந்தபோது, போட்டியின் இன்றைய முதலாம் நாள் நேர ஆட்டம் நிறைவிற்கு வந்தது. இன்று பறிபோன மூன்று விக்கெட்டுக்களில் இரண்டினை திலான் நிமேஷ் வெறும் 13 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.  

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி: 266/9d (60.4), திலான் நிமேஷ் 111, அவிந்து கனேஷ் 48, தொரின் பிடிகல 3/43, முதித லக்ஷன் 3/79

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி: 63/3 (24.1), சஷிக கமகே 25*, திலான் நிமேஷ் 2/13

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்