2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது

Indian Premier League 2024

69

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப் சுற்று, இறுதிப்போட்டி ஆகியன நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட விபரங்களை ஐபிஎல் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த 22ஆம் திகதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியதுடன், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியது 

அந்த வகையில் தற்போது வரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்க்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

இந்தாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன்பின் இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி ஆட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது 

இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் நேற்று (25) அறிவித்துள்ளது 

அதன்படி இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறவுள்ளது. இத்தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் மே 24ஆம் திகதியும், இறுதிப்போட்டி மே 26ஆம் திகதியும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்..சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது 

இதன்மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டி 3ஆவது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. அத்துடன், 12 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையில்; நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<