புனித அலோசியஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி

276
ALOYSIUS' u19 cricket

காலி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், புனித அலோசியஸ் கல்லூரியானது 8 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிகள் வலுவான நிலையிலுள்ளன.

புனித அலோசியஸ் கல்லூரி எதிர் பண்டாரநாயக்க கல்லூரி

முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றிருந்த பண்டாரநாயக்க கல்லூரி, முதல் இனிங்ஸில் முன்னிலை பெறுவதாயின் மேலும் 178 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

கீழ்வரிசை வீரர்களும் பெரிதாக சோபிக்காத நிலையில் பண்டாரநாயக்க கல்லூரி 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக சாசிரி அதிகாரி 52 ஓட்டங்களையும் ஹிமத் ஜயவீர 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித அலோசியஸ் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் ஹரீன் புத்தில 57 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இனிங்ஸில் 102 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட புனித அலோசியஸ் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய பண்டாரநாயக்க கல்லூரி அணி மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியது.

அற்புதமாக ஆடிய சாசிரி அதிகாரி 82 ஓட்டங்கள் மற்றும் ஹசித 40 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்ட போதிலும், இரண்டாவது இனிங்ஸிற்காக பண்டாரநாயக்க கல்லூரி 155 ஓட்டங்களுக்கு சுருண்டது. புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக கவிக டில்ஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

53 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரியினர், 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.  அஷென் பண்டார அதிகபட்சமாக 30 ஓட்டங்களைக் குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 269 (71) – கவிக டில்ஷான் 80*, பசிந்து நாணயக்கார 47, ரவிந்து சஞ்சன 31, சிசித்த மதநாயக 3/48

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 167 (56.3) – சாசிரி அதிகாரி 52, ஹிமத் ஜயவீர 25, ஹரீன் புத்தில 4/57, ரவிந்து சஞ்சன 2/19, கவிக டில்ஷான் 2/36

பண்டாரநாயக்க கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 155 (53.5) – சாசிரி அதிகாரி 82, ஹசித 40, கவிக டில்ஷான் 4/25, ஹரீன் புத்தில 2/30

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 54/2 (12.2) – அஷென் பண்டார 30

முடிவு – புனித அலோசியஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் புனித ஜோசப் கல்லூரியும் மோதிக் கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

புனித ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதல் சிறப்பாக பந்து வீச, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக துஷான் குருகே 32 ஓட்டங்களையும்,  சச்சிந்த கொலம்பகே 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித ஜோசப் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் ருச்சிர ஏக்கநாயக்க 4 விக்கெட்டுகளையும் ஹரீன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரேவன் கெலி 76 ஓட்டங்களையும், பவன் பெரேரா 56 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, புனித ஜோசப் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 150 (46.5) – துஷான் குருகே 32, சச்சிந்த கொலம்பகே 24, ருச்சிர ஏக்கநாயக்க 4/42, ஹரீன் பெரேரா 3/28

புனித ஜோசப் கல்லூரி – 151/2 (46) – ரேவன் கெலி 76, பவன் பெரேரா 56


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் மொரட்டுவ மகா வித்தியாலயம்

இன்று ஆரம்பமான மற்றுமொரு போட்டியில் புனித ஜோசப் வாஸ் கல்லூரியை எதிர்த்து மொரட்டுவ மகா வித்தியாலயம் போட்டியிட்டது. நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தனஞ்சய பெரேரா (110) மற்றும் மதுஷான் ரணதுங்க (108) ஆகியோர் சதங்கள் விளாச, புனித ஜோசப் வாஸ் கல்லூரியினர் 90.3 ஓவர்களில் 332 ஓட்டங்களைக் குவித்தனர். பிரசாத் பெரேரா 62 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் வாஸ் கல்லூரி – 332 (90.3) – தனஞ்சய பெரேரா 110, மதுஷான் ரணதுங்க 108, பிரசாத் பெரேரா 62