கோல்ட்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஜெஹான் டேனியல்

138

இலங்கை கிரிக்கெட் சபை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கென புதிதாக ஒழுங்கு செய்த “மேஜேர் எமர்ஜிங் லீக் (Major Emerging League)” என்ற பெயரிலான இரண்டு நாட்கள் கொண்ட கழக கிரிக்கெட் தொடரில்  இன்று (05) ஆறு போட்டிகள் நடைபெறக்கூடியதாக இருந்தது.

இன்று நடைபெற்ற போட்டிகளில் ஜெஹான் டேனியல் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் அணிக்காக சகலதுறைகளிலும் ஜொலித்ததோடு, இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பினுர பெர்னாந்துவும் அசத்தலான முறையில் செயற்பட்டிருந்தார்.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் சமநிலையில் முடிவடைந்த இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இராணுவப்படை அணிக்கு எதிராக மைதான சொந்தக்காரர்களான கோல்ட்ஸ் கழக அணியினர் முழு ஆதிக்கத்தினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக ஜெஹான் டேனியல் 156 ஓட்டங்களை விளாசி உதவியதால், அவரது அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் எடுத்து வலுவான நிலையில் காணப்பட்ட போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

பின்னர், இராணுவப்படை அணி தமது முதல் இன்னிங்ஸில் ஆடி 116 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பின்னடைவான நிலையில் இருந்த போது ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ஏற்கனவே துடுப்பாட்டத்தில் அசத்திய ஜெஹான் டேனியல் இம்முறை பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஸ்கோர் விபரம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 359/6 (74) ஜெஹான் டேனியல் 156, விஷாத் ரன்திக்க 50*, ஹசான் துமின்து 49, சன்ஜிக்க ரித்ம 3/46

இராணுப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 116/8 (47) சன்ஜிக்க ரித்ம 56, ஜெஹான் டேனியல் 2/11

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC அணி

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்தது. இதனால் ஆட்டத்தின் இன்றைய முதல் நாளில் 32 ஓவர்களே வீசப்பட்டது. மழையின் முன்னர் போட்டியில் BRC அணியினால் பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி 131 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்காக இடதுகை துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக்க அரைச்சதம் விளாசியிருந்ததோடு, தேசிய அணி வீரரான வனின்து ஹஸரங்க உம் 46 ஓட்டங்களை பெற்று உதவினார்.

ஸ்கோர் விபரம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 131/4 (32) மினோத் பானுக்க 58*, வனின்து ஹஸரங்க 46, விக்கும் சஞ்சய 2/21

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியிலும் மழையின் குறுக்கீடு காணப்பட்டதால் முதல் நாளில் சில ஓவர்களே வீசப்பட்டிருந்தன. முன்னதாக போட்டியில் முதலில் துடுப்பாடிய துறைமுக அதிகாரசபை அணியினர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாந்துவின் அதிரடிப்பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் வெறும் 53 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸில் சுருண்டனர். பினுர பெர்னாந்து வெறும் 12 ஓட்டங்களை விட்டுத்தந்து துறைமுக அதிகாரசபையின் 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய தமிழ் யூனியன் அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டபோது ஆட்டம் மழையினால் இடைநிறுத்தப்பட்டது.

ஸ்கோர் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை (முதல் இன்னிங்ஸ்) – 53 (22) பினுர பெர்னாந்து 4/12, இசுரு தனன்ஞய 2/05

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 22/2 (7)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


பதுரெலியா கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியிலும் மழை தனது வேலையைக் காட்டியிருந்தது. இதனால், இன்றைய நாளுக்கான போட்டியில்  வெறும் 33 ஓவர்கள் மட்டுமே விளையாடக்கூடியதாக இருந்ததுடன் குறித்த ஓவர்கள் அனைத்தினையும் எதிர்கொண்ட பதுரெலிய கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை குவித்திருந்தது. பதுரெலிய அணியின் துடுப்பாட்டத்தில் சச்சின் பெர்னாந்து அரைச்சதம் ஒன்றுடன் ஆட்டமிழக்காது இருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152/2 (33) சச்சின் பெர்னாந்து 50*, தெனுவான் ராஜகுமார 30*

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் NCC அணி

கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணி 39.3 ஓவர்களில் தமது முதல் இன்னிங்ஸிற்காக 133 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. நீர்கொழும்பு அணிக்காக துடுப்பாடி வரும் திலான் ஜயலத் 38 ஓட்டங்களுடனும், அஞ்சலோ ஜயசிங்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

ஸ்கோர் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 133/3 (39.3) திலான் ஜயலத் 38*, சிஹான் திலக்ஷிரி 35, அஞ்சலோ ஜயசிங்க 27*

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

வெலிசரையில் ஆரம்பான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற களுத்துறை நகர கழக அணி, கடற்படை வீரர்களை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த கடற்படை வீரர்கள் மிகவும் தடுமாற்றத்தை காண்பித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் 94 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது காலநிலை சீர்கேட்டினால் முதல் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. களுத்துறை நகர அணிக்காக பந்துவீச்சில் அசத்திய பசிந்து மதுஷன் 5 விக்கெட்டுக்களையும், எரங்க ரத்னாயக்க 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 94/9 (34) பசிந்து மதுசன் 5/20, எரங்க ரத்னாயக்க 4/29

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்