ஸாஹிராவை வீழ்த்திய புனித பேதுரு கல்லூரிக்கு பிரிவு ஒன்றில் மூன்றாம் இடம்

325

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான பிரிவு ஒன்று பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியை பெனால்டியில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணி பிரிவு ஒன்றில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.

ஏற்கனவே கடந்த வாரம் இடம்பெற்ற அரையிறுதியில் ஸாஹிராக் கல்லூரி வீரர்கள் புனித ஜோசப் கல்லூரியிடமும், புனித பேதுரு கல்லூரி வீரர்கள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிடமும் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக கொழும்பு சிடி லீக் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாம் இடத்திற்கான இந்த மோதலில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்தின.  

இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனை எதிர்கொள்ளவுள்ள யாழ் பத்திரிசியார்

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம்..

எனினும் இன்றைய போட்டியில் தமது முன்னணி வீரர்கள் பலர் இன்றியே புனித பேதுரு கல்லூரி களமிறங்கியது. எனவே, அணியின் பின்களத்தைப் பலப்படுத்த அணியின் முன்னணி வீரர் சபீர் ரசூனியா பின்களத்தின் மத்தியில் விளையாடினார். மறுமுனையில் ஸாஹிரா வீரர்கள் தமது வழமையான வீரர்களுடன் விளையாடினர்.

போட்டி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் மத்திய களத்தில் வலது புற எல்லையில் இருந்து ஸாஹிரா வீரர் சயீன் உயர்த்தி வேகமாக உள்ளனுப்பிய பந்தை புனித பேதுரு கல்லூரியின் கோல் காப்பாளர் மிதுர்ஷன் கோலுக்கு மிக அண்மையில் இருந்து பிடித்தார்.

ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அவர்கள் உருட்டி வெளியில் அடித்து வாய்ப்பை வீணடித்தனர்.

35 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து ஹிமாஷ் கோலுக்குள் செலுத்திய பந்தை ராசா ஹெடர் செய்வதற்கு வருவதற்குள் மிதுர்ஷன் பந்தை குத்தி அங்கிருந்து வெளியேற்றினார்.

முதல் பாதி முழுவதும் ஸாஹிரா வீரர்கள் எதிரணியின் பாதியில் அதிக நேரம் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புக்களை உருவாக்கினர். எனினும், புனித பேதுரு கல்லூரியின் நட்சத்திர வீரரும், இலங்கை 19 வயதின் கீழ் தேசிய அணி வீரருமான சபீர் ரசூனியா எதிரணியின் அனைத்து வாய்ப்புக்களையும் இறுதி நேரத்தில் முறியடித்தார்.  

இதன் காரணமாக முதல் பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவுற்றது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 0 – 0 புனித பேதுரு கல்லூரி  

இரண்டாவது பாதி ஆரம்பமாகி 7 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் முன்களத்தில் ஸாஹிரா வீரர்களிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஹம்மாடிடம் வந்த பந்தை அவர் கோல் நோக்கி உதைந்தார். இதன்போது பின்கள வீரர்கள், கோல் காப்பாளர் அனைவரையும் கடந்து சென்ற பந்து கோலின் இடது புற கம்பத்தை அணிமித்த வகையில் வெளியே சென்றது.

மூன்றாவது ஆண்டாகவும் சம்பியனான ஓல்ட் பென்ஸ்

எட்டாவது முறையாக நடைபெற்ற மூத்த கால்பந்து..

போட்டியில் பேதுரு கல்லூரி வீரர்களுக்கு கோலுக்கான சிறந்த முதல் முயற்சி இரண்டாவது பாதியிலேயே கிடைத்தது. மத்திய களத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கை சபீர் எதிரணியின் கோல் திசை நோக்கி உதைந்தார். இதன்போது டேனியல் மக்ராத் மற்றும் பயாத் ஆகியோருக்கு கோல் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தும், அவற்றை ஸாஹிரா பின்கள வீரர்கள் தடுத்தனர்.

55 நிமிடங்கள் கடந்த நிலையில் பேதுரு கல்லூரியின் கோல் எல்லைக்கு சற்று தொலைவில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மொஹமட் ஆகிப் பெற்றார். அவர் கோலுக்குள் செல்லும் வகையில் உதைந்த பந்தை மிதுர்ஷன் பாய்ந்து தட்டினார்.

மேலும் சில நிமிடங்களில் பேதுரு கல்லூரி வீரர்கள் ஸாஹிரா அணியின் கோல் எல்லைவரை பந்தை எடுத்து வந்து இறுதியாக பஹாதிடம் வழங்கினர். அவர் மேலும் முன்னோக்கி பந்தை எடுத்து வந்து கோலுக்காக முயற்சிக்கையில் ஸாஹிரா பின்கள வீரர்கள் அதனைத் தடுத்தனர்.

அதன் பின்னரும் ஸாஹிரா வீரர்கள் மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகளை எதிரணியின் பின்கள வீரர்களும் கோல் காப்பாளர் மிதுர்ஷனும் தடுத்தனர். குறிப்பாக முதல் பாதி போன்றே இரண்டாவது பாதியிலும் சபீரின் தடுப்புக்கள் ஸாஹிரா வீரர்களுக்கான பல கோல் முயற்சிகளுக்கு தடையாக அமைந்தன.

எனவே, இரண்டாவது பாதியும் எந்தவித கோல்களும் இன்றி நிறைவடைய போட்டி சமநிலையானது.  

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 0 – 0 புனித பேதுரு கல்லூரி

எனவே, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட பெனால்டி உதையின்போது புனித பேதுரு கல்லூரி வீரர்கள் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று பிரிவு ஒன்றில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

மஞ்சள் அட்டை  

புனித பேதுரு கல்லூரி – கவீஷ் கௌஷான் 67’