புதிய பொறுப்பினை கையில் எடுக்கும் ட்வெய்ன் பிராவோ

103

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறைவீரரான ட்வெய்ன் பிராவோ 2023ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> LPL போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில் பிரதீப் ஜயப்பிரகாஷ்!

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த L. பாலாஜி சொந்த காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகியதனை அடுத்தே ட்வெய்ன் பிராவோ சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பொறுப்பினை எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டிலிருந்து சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக IPL போட்டிகளில் ஆடி வந்த பிராவோ, IPL தொடரில் அதிக விக்கெட்டுக்களை (183) கைப்பற்றிய பந்துவீச்சாளராக காணப்படுவதோடு, சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடியிருந்த வீரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராவோ வீரராக இருந்த போது சென்னை சுபர் கிங்ஸ் அணி மூன்று தடவைகள் (2011, 2018, 2021) IPL சம்பியன் பட்டத்தினை வென்றதோடு 2014ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் லீக் தொடரின் வெற்றியாளர்களாகவும் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் IPL போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுக்கும் போது வழங்கப்படுகின்ற Purple Cap இணை இரண்டு தடவைகள் வென்றிருக்கும்  ட்வெய்ன் பிராவோ, IPL பருவம் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை (32) கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்கிற சாதனையினையும் ஹர்சால் பட்டேல் உடன் இணைந்து நிலைநாட்டியிருக்கின்றார்.

எனவே IPL போட்டிகளில் பிராவோ கொண்டிருக்கும் அனுபவம் அவரினை புதிய பருவத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு சிறந்த பந்துவீச்சுப் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்பட உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

>> IPL ஏலத்தில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு 2 கோடி!

இதேவேளை சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்படும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிராவோ அதில் அதிக மகிழ்ச்சி அடைவதாக கூறியிருக்கின்றார்.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<