TNPL T20 தொடரில் ஒரு பந்திற்காக இரண்டு Reviews

147
RAVICHANDRAN ASHWIN

இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் தமிழ் நாட்டு பிரீமியர் லீக் (TNPL) T20 தொடரில் ஒரு பந்திற்காக இரண்டு நடுவர் மேன்முறையீடுகள் (Reviews) உபயோகித்த சம்பவம் ஒன்று பதிவாகியிருக்கின்றது.

>> அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதுசங்க! ; LPL ஏலம் தொடர்பான முழு விபரம்!

தமிழ் நாட்டு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது பருவத்திற்கான போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்த தொடரில் 04ஆவது போட்டி Ba11sy திருச்சி மற்றும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிகள் இடையில் நேற்று (14) கோவையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணியின் தலைவராக காணப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் முதலில் துடுப்பாடிய திருச்சி அணிக்கு எதிராக போட்டியின் 13ஆவது ஓவரினை வீசியிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அஸ்வின் வீசிய பந்தினை எதிர்கொண்ட துடுப்பாட்டவீரரான ராஜ்குமார் குறித்த பந்தை எதிர்கொண்டு விக்கெட்காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த ஆட்டமிழப்பிற்கு எதிராக ராஜ்குமார் மூன்றாம் நடுவரிடம் மேன்முறையீடு (Decision Review) செய்தார். இதனை அடுத்து மூன்றாம் நடுவர் துடுப்பாட்டவீரரின் மட்டையில் பந்துபடவில்லை என அறிவித்ததோடு குறித்த ஆட்டமிழப்பு ஆட்டமிழப்பு இல்லை என துடுப்பாட்ட வீரருக்கு சாதகமாக போட்டியின் மூன்றாம் நடுவர் புதிய தீர்ப்பை அறிவித்திருந்தார். இதனால் ராஜ்குமாருக்கு மீண்டும் துடுப்பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

>> தம்புள்ள ஓரா அணியுடன் இணையும் முன்னாள் ஆஸி. வேகப்புயல்!

விடயங்கள் இவ்வாறு இருக்க மூன்றாம் நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின், தனது அணி சார்பில் மீண்டும் நடுவர் முடிவிற்கு எதிராக மேன்முறையீடு செய்தார். அஸ்வின் உடைய மேன்முறையீட்டை அடுத்து மீண்டும் ஆட்டமிழப்பை பரிசோதித்த மூன்றாம் நடுவர் மீண்டும் ராஜ்குமார் ஆட்டமிழக்கவில்லை என தீர்ப்பு வழங்கியிருந்தார்.

போட்டி நடுவர்களிடம் அஸ்வின் தொடர்ந்து வாதிட்டிருந்த போதும் துடுப்பாட்டவீரருக்கு சாதகமாகவே முடிவு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் இது கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பந்திற்காக இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்யப்பட்ட ஒரு விநோத சம்பவமாகவும் பதிவானது.

இதேவேளை Ba11sy திருச்சி மற்றும் திண்டுக்கல் திருச்சி அணிகள் இடையிலான போட்டியில், திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியானது 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் சமூக வலைதளங்களில் அஸ்வினின் செயற்பாட்டுக்கு எதிராக கிரிக்கெட் இரசிகர்கள் பலர் எதிர்ப்பினை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<