அபுதாபி T10 தொடரில் விளையாடவுள்ள 12 இலங்கை வீரர்கள்!

321
Abu Dhabi T10 League 2021
 

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட, இலங்கை அணியின் 12 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபி T10 லீக் தொடரின் நான்காவது அத்தியாயம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 6ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

>> அபுதாபி T10 லீக்கில் திசர, இசுரு உதான Icon வீரர்களாக அறிவிப்பு

இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கை அணியின் முன்னணி T20 வீரர்களான திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோர் முறையே புனே டெவில்ஸ் மற்றும் பங்ளா டைகர்ஸ் அணிகளின் ஐகொன் வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.  

கடந்த ஆண்டு பங்ளா டைகர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த திசர பெரேரா, இம்முறை புனே டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக கடந்தமுறை விளையாடிய பானுக ராஜபக்ஷ மீண்டும் அதே அணியில் இடம்பெற்றுள்ளார்.

டெல்லி புல்ஸ் அணியில் கடந்த ஆண்டு இணைக்கப்பட்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், துஷ்மந்த சமீர தொடர்ந்தும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இவருடன், கடந்த ஆண்டு மராதா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடிய தசுன் ஷானகவும், இம்முறை டெல்லி புல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், கடந்த ஆண்டு நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய நுவான் பிரதீப் தொடர்ந்தும் அந்த அணியில் இடம்பிடித்துள்ளதுடன், அஜந்த மெண்டிஸ் பாணியில் பந்துவீசும் மஹீஸ் தீக்ஷனவும் நொர்தென் வொரியர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இந்த அணிக்காக விளையாடிய அசேல குணரத்ன அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக்கில் தொடர் நாயகன் விருதினை வென்ற வனிந்து ஹசரங்க கடந்த முறை மராதா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடிய போதும், இம்முறை டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், லஹிரு குமாரவும் இதே அணியில் இடம்பெற்றுள்ளார். 

புனே டெவில்ஸ் அணியில் திசர பெரேராவுடன் இணைந்து சாமர கபுகெதர மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோரும் விளையாடவுள்ளனர். இறுதியாக இலங்கை அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான  அவிஷ்க பெர்னாண்டோ டீம் அபுதாபி அணிக்காக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  • பங்ளா டைகர்ஸ் – இசுரு உதான
  • டெல்லி புல்ஸ் – தசுன் ஷானக, துஷ்மந்த சமீர
  • டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் – பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார
  • புனே டெவில்ஸ் – திசர பெரேரா, சாமர கபுகெதர, அஜந்த மெண்டிஸ்
  • டீம் அபுதாபி – அவிஷ்க பெர்னாண்டோ
  • நொர்தென் வொரியர்ஸ் – நுவான் பிரதீப், மஹீஸ் தீக்ஷன

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<