3ஆம் இலக்கத்தில் விளையாட மிகவும் விரும்புகிறேன் – சரித்

ICC T20 World Cup – 2021

192

இலங்கை அணிக்காக 3ஆம் இலக்கத்தில் விளையாhடுவதற்கு ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ள சரித் அசலங்க, அந்த இலக்கத்தில் விளையாடுவது மிகவும் இலகுவானது என்று கூறியுள்ளார்.

T20 உலகக் கிண்ணத்தில் குழு 1க்கான சுபர் 12 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஏற்கனவே இரண்டு அணிகளும் தாம் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுடனான போட்டிக்கான ஆயத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் இளம் வீரர் சரித் அசலங்க ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.

<<அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் மஹீஷ் தீக்ஷன ஆடுவாரா?>>

இதில் இலங்கை அணியில் 3ஆம் இலக்க வீரராக களமிறங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சரித் அசலங்க கருத்து தெரிவிக்கையில்,

இதற்குமுன் T20 போட்டிகளில் எனக்கு 3ஆம் இலக்கத்தில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் 4 மற்றும் 5ஆம் இலக்கங்களில் களமிறங்கினேன். அதன்பிறகு அவிஷ்க மற்றும் பானுக ஆகிய இருவரினதும் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்களை செய்ததால் மீண்டும் என்னை முன்வரிசையில் களமிறக்கினார்கள்.

ஏவ்வாறாயினும், T20 போட்டிகளில் 3ஆம் இலக்கத்தில் விளையாட நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயது முதல் நான் 3ஆம் இலக்கத்தில் தான் விளையாடி வந்தேன். எனவே தற்போது 3ஆம் இலக்கத்தில் விளையாடுவதும் எனக்கு இலகுவாக ஓட்டங்களைக் குவிக்க முடிகின்றது என தெரிவித்தார்.

இதனிடையே, T20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளூர் கழக மட்ட T20 போட்டிகளில் எனது துடுப்பாட்ட சராசரி (Strike Rate) 130 அளவில் காணப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா அணியுடனான தொடருக்குப் பிறகு என்னால் பெரிதளவில் பிரகாசிக்க முடியவில்லை. அதன்பிறகு நடைபெற்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஒன்றில் மாத்திரம் தான் விளையாடினேன்.

<<ஆஸி.யை வீழ்த்த சரியான தருணம் ; பயன்படுத்துமா இலங்கை?>>

எவ்வாறாயினும், அணியின் பயிற்சியாளர் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரிடம் இருந்து தேவையான ஆலோசனைகளைப் பெற்று எனது துடுப்பாட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளேன் என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க இன்று நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெறவுள்ள போட்டிக்கான தயார்படுத்தல் மற்றும் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட வியூகங்கள் தொடர்பிவல் அவர் பேசுகையில்,

அவுஸ்திரேலியா மிகவும் பிரபலமாக அணியென்பதை அனைவரும் அறிவர். எனவே அவர்களுக்கு எதிராக நாங்கள் பிரத்தியேகமான திட்டமொன்றை வைத்துள்ளோம். அணியில் விளையாடுகின்ற 11 பேருக்கும் நாங்கள் ஒரு திட்டத்தை வைத்துள்ளோம். எனவே அதற்காக நாங்கள் தனிப்பட்ட முறையில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

பங்களாதேஷ் அணிக்கும், அவுஸ்திரேலியா அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. வேகப்பந்துவீச்சு தான் அவுஸ்திரேலிய அணியின் பலமாகும்.  எனவே அதற்காக நாங்கள் இரண்டு நாட்கள் சிறந்த முறையில் பயிற்சிகளை எடுத்தோம். ஆகவே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல, நாங்கள் வலைப்பயிற்சியின் போது நிறைய பயிற்சிகளை எடுத்தோம். எமது அணியிலும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அதை சொல்லிக் கொடுப்பதற்கான பயிற்சியாளர்களும் எமது அணியில் உள்ளார்கள்.

எனவே அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சிறந்த முறையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>