கம்போடியாவிடம் படுதோல்வி கண்டது இலங்கை

750

கம்போடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி கம்போடிய தேசிய கால்பந்தாட்ட அணியுடன் நாட்டின் தலைநகரான பெனோம் பென்னில் மோதின. போட்டியின் ஆரம்பம்  முதலே ஆதிக்கம் செலுத்திய கம்போடியா போட்டியை 4-0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகு வெற்றிகண்டது.

போட்டி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்திலேயே கம்போடியா கோல் ஒன்றைப் போட்டு முன்னிலை பெற்றது. சான் வட்டநாக்காவினால் உள்ளனுப்பப்பட்ட ப்ரீ கிக் வாய்ப்பை சோய் விசால் தலையால் முட்டி கோலாக்கினார்.

முதலாவது கோல் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே இலங்கை அணி வீரர் அசிகுர் ரஹ்மானுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பாக விளையாடிய கம்போடியா பல வாய்புகளை உருவாக்கிக்கொண்ட போதிலும் அவர்களால் கோலொன்றைப் பெற முடியாமற் போனது. இலங்கை அணியின் தலைவரான சுஜன் பெரேரா சிறப்பாக செயற்பட்டு பல தடுப்புக்களை மேற்கொண்டார்.

முதலாம் பாதியின் மத்தியில் வெளிச்சக் கம்பங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டி பத்து நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

அதன் பின்பு மீண்டும் ஆரம்பமான போட்டியில் இலங்கை அணிக்கு இரு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. சர்வான் ஜோஹர் மற்றும் கவிந்து இஷானிற்கு கிடைக்கப்பெற்ற இவ்விரு வாய்ப்புகளையும் அவர்களால் கோலாக்க முடியாமற்போனது.

முதலாம் பாதி முடிவடைய நான்கு நிமிடங்களே இருக்கும் போது கம்போடியா அணி தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியது. சான் வட்டநாக்காவினால் உள்ளனுப்பப்பட்ட கோர்னர் வாய்ப்பை தியரி சாந்த கோலாக்கினார்.

முதல் பாதி – கம்போடியா 2-0 இலங்கை

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பிக்க முன்பு இலங்கை அணி, சோபிக்கத் தவறிய சுபாஷ் மதுஷனிற்கு பதிலாக 19 வயதுடைய வீரர் அபாம் அக்ரமை களமிறக்கியது. இது அபாம் அக்ரமின் கன்னிப் போட்டியாகும்.

எனினும் அபாம் அக்ரம் மிகவும் ஏமாற்றமான முறையில் வெளியேற நேர்ந்தது. ஆரம்பத்தில் பிழையான நடவடிக்கை காரணமாக மஞ்சள் அட்டையைப்பெற்ற அக்ரம் அதற்குப் பின் முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்த முழுமையாக வெளியேற நேர்ந்தது. அவரின் இடத்தை பண்டார வரகாகொட பூர்த்தி செய்தார்.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் கியோ சொக்பேங் கொலொன்றைப்போட்டு கம்போடிய அணியை 3-0 என முன்னிலைப்படுத்தினார்.

இலங்கை அணியினால் கம்போடிய வீரர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமற்போனது வருத்தமளிக்கத்தக்க விடயமாகும்.

போட்டி முடிவடையும் தருவாயில் பிரதான பயிற்றுவிப்பாளரான டட்லி ஸ்டெய்ன்வோல் மேலும் இரு அறிமுக வீரர்களான தனுஷ்க மதுஷங்க மற்றும் அமித் குமார ஆகிய இருவரையும் களமிறக்கினார்.

போட்டி நிறைவடைய ஒரு நிமிடமே இருக்கும் தருவாயில் கியோ சொக்பேங் தனது இரண்டாவது கோலைப் போட்டு கம்போடிய ரசிகர்களை ஆரவாரப் படுத்தினார்.  

இறுதியில் போட்டியை கம்போடியா 4-0 எனக் கைப்பற்றியது.

இரண்டாம் பாதி – கம்போடியா 4-0 இலங்கை

ThePapare.com சிறப்பாட்டக்காரர் – சான் வட்டநாக்கா (கம்போடியா)