அபுதாபி T10 லீக்கில் திசர, இசுரு உதான Icon வீரர்களாக அறிவிப்பு

2052
 

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரில் ஐந்து இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளதுடன், சகலதுறை வீரரான திசர பெரேரா புனே டெவில்ஸ் அணியின் ஐகொன் வீரராகவும், இசுரு உதான பங்க்ளா டைகர்ஸ் அணியின் ஐகொன் வீரராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் 2017இல் ஆரம்பிக்கப்பட்ட அபுதாபி T10 லீக் தொடரின் நான்காவது அத்தியாயம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எட்டு அணிகள் பங்குபற்றவுள்ள இந்த தொடரில் கிறிஸ் கெய்ல், சஹீட் அப்ரிடி, டுவைன் பிராவோ, அன்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.

>>வியாஸ்காந்த்தை யாழ் வீரர் என்பதால் அணியில் இணைக்கவில்லை: திலின கண்டம்பி

இதில் கிறிஸ் கெய்ல் அபு தாபி அணிக்காகவும், டுவைன் பிராவோ டெல்லி புல்ஸ் அணிக்காகவும், அன்ட்ரே ரஸல் நோர்த் வொரியர்ஸ் அணிக்காகவும், சுனில் நரைன் டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி க்ளெண்டர்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள்.

அத்துடன், அபுதாபி T10 லீக் தொடரில் இலங்கையில் இருந்து ஐந்து வீரர்கள் விளையாடவுள்ளார்கள்.

இதில் திசர பெரேரா புனே டெவில்ஸ் அணியின் ஐகொன் வீரராகவும், இசுரு உதான பங்க்ளா டைகர்ஸ் அணியின் ஐகொன் வீரராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அபுதாபி அணிக்காக இலங்கையின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும், டெல்லி புள்ஸ் அணிக்காக துஷ்மன்த சமீரவும், டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக பானுக ராஜபக்ஷவும், தசுன் ஷானக்க பங்க்ளா டைகர்ஸ் அணிக்காகவும் தொடர்ந்து விளையாடுவதற்கு தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

>>நுவன் துஷார அடுத்த மாலிங்கவா?

இந்த நிலையில், அபுதாபி T10 லீக் தொடரில் பங்குபற்றும் அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கும் வரைபு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் குழு A இல் மராத்தா அராபியன்ஸ், பங்க்ளா டைகர்ஸ், டெல்லி புள்ஸ், நோர்த் வொரியர்ஸ் அணிகளும், குழு B இல் டெக்கன் க்ளேடியேட்டர்ஸ், க்ளெண்டர்ஸ், அபுதாபி அணி மற்றும் புனே டெவில்ஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள T10 லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளும் அபுதாபியின் சையிட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<