இலங்கை 20 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு

AFC Cup 2023

485
 

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் (SAFF Under 20 Championship) மற்றும் ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் தொடர் (AFC Youth Championship) என்பவற்றுக்கான இலங்கை தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாப் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் ஜூலை 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வரில் உள்ள காலிங்க அரங்கில் இடம்பெறவுள்ளது. போட்டிகளை நடாத்தும் இந்தியா உட்பட இலங்கை, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய 5 நாடுகளின் 20 வயதின்கீழ் அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் இலங்கை 20 வயதின்கீழ் அணிக்கான வீரர்களுக்கான தெரிவுக்காக இலங்கை கால்பந்து சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் வீரர்கள் தெரிவுகள் மூன்று கட்ட போட்டிகளாக இடம்பெறவுள்ளன. முதல் கட்டமாக அண்மையில் இடம்பெற்ற போட்டித் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கான தெரிவுப் போட்டி இம்மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் இடம்பெறுகின்றன.

அடுத்த கட்டமாக, அண்மையில் நிறைவடைந்த மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தி, அதிலிருந்து தெரிவு செய்த வீரர்களுக்கான தெரிவுப் போட்டி இம்மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

மூன்றாவது கட்டமாக நாடு பூராகவும் உள்ள ஏனைய அனைத்து வீரர்களுக்குமான திறந்த தெரிவுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

திறந்த தெரிவு (Open Trails)

நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்கு தேசிய அணியில் உள்வாங்குவதற்கு வாய்ப்பு வழங்குவதற்காக இடம்பெறும் இந்த தெரிவுப் போட்டிகள் இம்மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய்) கொழும்பு பெத்தகான தேசிய கால்பந்து பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த தெரிவுகளில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 2003ஆம் அண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறான வீரர்கள் குறித்த இரு தினங்களிலும் காலை 6.30 மணிக்கு பெத்தகான தேசிய கால்பந்து பயிற்சி மையத்திற்கு சமுகம் தர வேண்டும்.

மேலும் ஒரு லீக்கில் அல்லது ஒரு விளையாட்டு கழகத்தில் அல்லது ஒரு பாடசாலையில் இருந்து அதிகபட்சம் 3 வீரர்களுக்கே இந்த தெரிவுப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.

எனவே, ஒரு லீக்கில் அல்லது ஒரு விளையாட்டு கழகத்தில் அல்லது ஒரு பாடசாலையில் இருந்து தமது வீரர்களை இந்த தெரிவிற்கு அனுப்ப விரும்பினால் குறித்த லீக்/கழகம்/பாடசாலையின் பெயர், பங்கேற்கும் வீரர்களின் பெயர் விபரம் என்பவற்றை கீழே உள்ள இலக்கத்திற்கு அழைப்பு மூலமே வடஸ்அப் மூலமோ தெரியப்படுத்த வேண்டும். வீரர்களின் பங்கேற்பை 2022 ஜூன் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு முன்னர் உறுதிப்டுத்த வேண்டும் என்றும் இலங்கை கால்பந்து சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 071 3319301 (ரவீன் ராஜகருனா)

மேலும், குறித்த இரண்டு தினங்களிலும் (27, 28) வீரர்கள் பங்கேற்பது கட்டாயம் என தெரிவித்துள்ள இலங்கை கால்பந்து சம்மேளம், இரண்டு தினங்களிலும் வீரர்களுக்கான சாப்பாடு ஏற்பாடுகள் கால்பந்து சம்மேளத்தினால் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இது 20 வயதின்கீழ் தேசிய அணிக்கான தெரிவு என்பதால் குறித்த வயதெல்லையை உடைய திறமையான வீரர்களை மாத்திரம் அனுப்புமாறும் இலங்கை கால்பந்து சம்மேளனம் கேட்டுக்கொள்கின்றது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<