“அரையிறுதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும்” – நவீட் நவாஸ்

ICC T20 World Cup 2022

2368

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எம்முடைய பலத்துக்கு ஏற்ப போட்டியிடுவது மாத்திரமின்றி, அரையிறுதிக்கான வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸ் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (29) நடைபெறவுள்ள சுபர் 12 சுற்றுக்கான போட்டி தொடர்பில் நவீட் நவாஸ் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

>> பினுர பெர்னாண்டோவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தொடர்பில் கருத்து வெளியிட்ட இவர், “உலகின் முன்னணி அணிகளில் ஒன்று நியூசிலாந்து. அவர்கள் உயர்ந்த தரத்துடனான அணி. உலகக்கிண்ணத்தை எடுத்துக்கொண்டால், எமது குழாத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய போன்ற அணிகள் இருக்கும்போது எந்த அணியையும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே அரையிறுதிக்கு செல்லவேண்டும் என்றால் எவ்வாறான தயார்படுத்தல்களை மேற்கொள்ளவேண்டும் என்பதை நாம் அறிவோம். அதானால் எமது பலத்துடன் விளையாடி அரையிறுதிக்கு தகுதிபெறும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்”

அதேநேரம் சிட்னி மைதானமானது இலங்கை அணிக்கு சாதகமான மைதானங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ள இவர், இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

>> வனிந்து ஹஸரங்கவின் மோசமான பந்துவீச்சு தொடர்பில் கூறும் கிரிஸ் சில்வர்வூட்!

“சிட்னி ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது. பந்துகள் வேகமாக பௌண்டரியை அடையக்கூடிய மைதானம். ஓட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே, மாற்று திட்டங்களுடன் நாம் களமிறங்க எதிர்பார்க்கிறோம். கடந்த காலங்களை பார்க்கும் போது சிட்னி மைதானம் இலங்கைக்கு சாதகமாக இருந்துள்ளது. எனவே, இந்தப்போட்டிக்காக நாம் காத்திருக்கிறோம்” என இவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சனிக்கிழமை (29) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பி.ப. 01.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<