LPL வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட 5 அதிகூடிய இணைப்பாட்டங்கள்!

Lanka Premier League

158

கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை என மூன்று வெவ்வேறு மைதானங்களில் வெற்றிகரமான முறையில் லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மூன்றாவது பருவகாலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

நடைபெற்றுமுடிந்த மூன்று தடவைகளும் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன்களாக மகுடம் சூடி ஹெட்ரிக் வெற்றியுடன் வெற்றிகரமான அணியாக திகழ்கின்றது.

LPL 2022 தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கியவர்கள்

LPL தொடரை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் சற்று முன்னேற்றத்தை காட்டி வருகின்றது. ரசிகர்களை கவரும் விதத்திலும் வீரர்களின் பிரகாசிப்புகளிலும் அற்புதமான முன்னேற்றத்தை பார்க்கமுடிந்தது.

வீரர்களின் பிரகாசிப்புகளில், துடுப்பாட்டத்தை பொருத்தவரை தனி வீரர்களின் பிரகாசிப்புகளுடன் இணைப்பாட்டங்கிளிலும் பல்வேறு மைல்கல்கள் எட்டப்பட்டிருந்தன. இதில் இந்த ஆண்டு LPL வரலாற்றின் அதிகூடிய மூன்று இணைப்பாட்டங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில் LPL வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய 5 இணைப்பாட்டங்களை பார்க்கலாம்.

ஷெவோன் டேனியல் – ஜோர்டன் கொக்ஸ் – 163 ஓட்டங்கள் (2022)

இம்முறை ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றிருந்த தம்புள்ள ஓரா அணி தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியிருந்தது. ஒரு வெற்றியை மாத்திரம் தம்புள்ள ஓரா அணி பெற்றிருந்த போதும், ஷெவோன் டேனியல் மற்றும் ஜோர்டன் கொக்ஸ் ஆகியோர் சாதனை இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இலங்கையின் எதிர்கால நட்சத்திரம் என கருதக்கூடிய இளம் வீரர் ஷெவோன் டேனியல் மற்றும் ஜொர்டன் கொக்ஸ் ஆகியோர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

குறித்த இந்த ஓட்ட எண்ணிக்கையானது LPL வரலாற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் என்பதுடன், முதல் விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகவும் பதிவாகியது. போட்டியை பொருத்தவரை அற்புதமாக ஆடிய ஷெவோன் டேனியல் 80 (55) ஓட்டங்களையும், ஜோர்டன் கொக்ஸ் 77 (58) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெதும் நிஸ்ஸங்க – அன்ரே பிளச்சர் – 156 ஓட்டங்கள் (2022)

LPL தொடரில் இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கண்டி பல்கோன்ஸ் அணியின் பெதும் நிஸ்ஸங்க மற்றும் அன்ரே பிளச்சர் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 156 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர்.

இவ்வருட ஆரம்பத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கை ஆரம்ப விக்கெட்டுக்கான அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியிருந்த போதும், அதன்பின்னர் ஷெவோன் டேனியல் மற்றும் ஜோர்டன் கொக்ஸ் ஆகியோர் இதனை முறியடித்திருந்தனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் அன்ரே பிளச்சர் 102 ஓட்டங்களை விளாசியதுடன், பெதும் நிஸ்ஸங்க 71 ஓட்டங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் – அவிஷ்க பெர்னாண்டோ – 133 ஓட்டங்கள் (2022)

LPL தொடரின் அதிகூடிய ஓட்ட இணைப்பாட்ட சாதனைகளில் மேற்குறிப்பிட்ட இரண்டு பதிவுகளுடன், ஜப்னா கிங்ஸ் அணியின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டொ ஆகியோர் மற்றுமொரு அற்புதமான ஆரம்ப இணைப்பாட்டத்தை இந்த ஆண்டு பதிவுசெய்திருந்தனர்.

தொடர் வரலாற்றில் 240 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை தம்புள்ள ஓரா அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி பதிவுசெய்திருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இவர்கள் இருவரும் 133 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

வேகமாக ஓட்டங்களை விளாசியதன் மூலம் அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும், குர்பாஸ் 35 பந்துகளில் 73 ஓட்டங்களையும் விளாசியிருந்தனர். இவர்கள் இருவரும் பெற்றுக்கொண்ட இணைப்பாட்டமானது LPL தொடரில் முதல் விக்கெட் மற்றும் ஓட்டங்கள் அளவில் மூன்றாவது அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது.

தசுன் ஷானக – சமிட் பட்டேல் – 127 ஓட்டங்கள் (2020)

கடந்த 2020ம் ஆண்டு இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக அதிரடியான இன்னிங்ஸ் ஒன்றை ஆடியிருந்தார். கண்டி வொரியர்ஸ் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டை  மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்களால் தம்புள்ள வைகிங் அணி வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணியின் மூன்று விக்கெட்டுகள் 64 ஓட்டங்களுக்கு சாய்க்கப்பட்டிருந்தது. எனினும் சமித் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த தசுன் ஷானக அற்புதமாக ஆடியிருந்தார். இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்காக 64 பந்துகளில் 127 ஓட்டங்களை பகிர்ந்து அணியை 195 ஓட்டங்களுக்கு அழைத்துச்சென்றனர்.

அபாரமாக ஆடிய தசுன் ஷானக 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 37 பந்துகளில் 73 ஓட்டங்களையும், சமிட் பட்டேல் 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த ஆண்டுக்கு முன்னர் இவர்களின் இந்த இணைப்பாட்ட பிரதியே அதிகூடிய இணைப்பாட்டமாக LPL தொடரில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஆண்டை பொருத்தவரை தம்புள்ள ஓரா அணிக்கும் தசுன் ஷானகவுக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கவில்லை. தம்புள்ள ஓரா அணி முதல் சுற்றில் வெளியேறியிருந்ததுடன், தசுன் ஷானக சரியாக பிரகாசிக்கவில்லை.

ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் – அவிஷ்க பெர்னாண்டோ – 122 ஓட்டங்கள் (2021)

LPL தொடரில் மூன்றாவது தடவையாக சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பார்க்கப்பட்ட விடயம் அவர்களுடைய ஆரம்ப இணைப்பாட்டம்.

கடந்த ஆண்டு ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குர்பாஸ் ஆகியோர் செயற்பட்டு அற்புதமான இணைப்பாட்டங்களை பகிர்ந்திருந்தனர். குறிப்பாக இந்த ஆண்டு 133 ஓட்டங்களை பகிர்ந்திருந்த இவர்கள், கடந்த ஆண்டு தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கு எதிராக 122 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். தற்போது இந்த இணைப்பாட்டம் 5வது அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியிருக்கிறது.

ஹம்பாந்தோட்டையில் கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில் சதமடிக்க, குர்பாஸ் 70 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதில் இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 122 ஓட்டகளை பகிர்ந்துக்கொண்டனர். குறிப்பிட்ட இணைப்பாட்டம் சாதனை இணைப்பாட்டமாக அமைந்திருந்ததுடன், இந்த ஆண்டும் இவர்கள் இருவரும் அணிக்கு தேவையான நேரங்களில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<