நியூட்டனின் அபார பந்துவீச்சுடன் யாழ்.மத்திக்கு இலகு வெற்றி

U19 Schools Cricket 2022

227
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கு எதிராக இன்று (21) நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் டிவிஷன் 3 ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணி 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

யாழ். மத்தியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மத்தியக் கல்லூரி அணி சாரங்கன், கஜன், சன்சஜன் மற்றும் சயந்தன் ஆகியோரின் பங்களிப்புடன் சிறப்பாக ஓட்டங்களை குவித்தது.

சன்சஜன், சாரங்கனின் அரைச்சதங்களுடன் மத்திய கல்லூரிக்கு வெற்றி

சாரங்கன் 45 ஓட்டங்கள், கஜன் 42 ஓட்டங்கள், சன்சஜன் 34 ஓட்டங்கள் மற்றும் சயந்தன் 33 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுக்க மத்தியக் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. பந்துவீச்சில் இந்துக் கல்லூரி சார்பாக S.பரத்வாசன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக் கல்லூரி அணியினர், மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறினர். இந்துக் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் K. பரேசித் மாத்திரம் போராடி 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன்காரணமாக யாழ். இந்துக் கல்லூரி அணி 32.5 ஓவர்கள் நிறைவில் 83 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. யாழ். மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சில் கடந்த போட்டிகளில் சகலதுறையிலும் பிரகாசித்துவரும் நியூட்டன் 12 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுருக்கம்

யாழ். மத்தியக் கல்லூரி – 254/7 (50), சாரங்கன் 45, கஜன் 42, S.பரத்வாசன் 38/2

யாழ். இந்துக் கல்லூரி – 83/10 (32.5), K. பரேசித் 32, நியூட்டன் 12/6

முடிவு – யாழ். மத்தியக் கல்லூரி அணி 171 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<