16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தவறவிடும் பங்களாதேஷ் நட்சத்திரம்

ICC Men's Cricket World Cup 2023

202
ICC Men's Cricket World Cup 2023

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த அணியின் நட்சத்திர வீரர் தமிம் இக்பால் உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியில் இடம்பெறவில்லை. கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் கோரிக்கைக்கு அமைய தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

காயம் காரணமாக தலைவர் பதவியை துறந்த அவர், அதன் பிறகு போட்டிகளில் இடம் பெற்று விளையாடினாலும், காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரை தவறவிட்டார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிம் இக்பால் வினையாடியிருந்தார்.

நியூசிலாந்திற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆடி 58 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்த அவரால் 3ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது. மீண்டும் முதுகு வலியால் தவித்த அவருக்கு அந்தத் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிம் இக்பாலை ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் ஆட வைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை வற்புறுத்தியதாகவும், ஆனால், அவர் தன்னால் ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று அவர் கூறியதாகவும் தகவல் வெளியானது. மேலும், இப்படி காயத்தோடு இருக்கும் ஒருவரோடு உலகக் கிண்ணத்தில் விளையாட தன்னால் முடியாது என்று அணித் தலைவர் சகிப் அல் ஹசன் திட்டவட்டமாக கூறியதாக செய்தி வெளியாகியது.

குறிப்பாக, தமிம் இக்பால் உலகக் கிண்ணத் தொடருக்காக பெயரிடப்பட்டால் தான் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதோடு உலகக் கிண்ணத் தொடருக்கு வரமாட்டேன் என்றும் சகிப் அல் ஹசன் எச்சரிக்கை விடுத்திருந்ததாக சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனையடுத்து தான் தமிம் இக்பால் இல்லாத 15 பேர் கொண்ட ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்ட இந்த அணியில் 2007ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணிக்காக 16 வருடங்களாக விளையாடி வரும் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் இம்முறை உலகக் கிண்ணத்தில் இடம்பெறாததது அந்த அணியின் ரசிகர்களுக்;கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம், காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரை தவறவிட்ட வேகப் பந்துவீச்சாளர் எபாதத் ஹொசைன் ஒருநாள் உலகக் கிண்ண அணியிலும் இடம்பெறவில்லை.

இதேவேளை, சகிப் அல் ஹசன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வரிசையை முஷ்பிகுர் ரஹீம், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் பலப்படுத்தவுள்ளனர்.

புந்துவீச்சைப் பொறுத்தவரை எபாதத் ஹொசைன் இடம்பெறாத நிலையில் டஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் மற்றும் தன்ஸின் ஹசன் ஆகியோரிடம் பலம் சேர்க்கவுள்ளனர்.

2020இல் நடைபெற்ற ICC 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணியில் இடம்பெற்ற தௌஹித் ஹிருதாய், ஷொரிபுல் இஸ்லாம், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன் ஆகியோர் இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஒக்டோபர் 7ஆம் திகதி தரம்சாலாவில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பு இலங்கை (29) மற்றும் இங்கிலாந்து (02) உடன் பயிற்சி போட்டிகளில் அந்த அணி விளையாடவுள்ளது.

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணி விபரம்

சகிப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தௌஹித் ஹிருதாய், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமட், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷொரிபுல் இஸ்லாம், நசும் அஹமட், மெஹதி ஹசன், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன், மஹ்மதுல்லா ரியாத்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<