63,000 சனத்தொகை: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சிறிய நாடு

Tokyo Olympics - 2020

257
Tokyo Olympics 2020 Day-04 Round Up

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா போட்டிகள் ஆரம்பமாகி இன்றுடன் (27) நான்கு நாட்கள் நிறைவடைந்துவிட்டன.

இதில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற பல போட்டிகளில் பல புதிய நாடுகள் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தன

அதேபோல, ஒலிம்பிக்கில், கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி வருவதுடன், பல வீரர்கள் சாதனைகளையும் நிலைநாட்டி அசத்தி வருகின்றனர்.

>> நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்கவும் முதல் சுற்றுடன் வெளியேறினார்

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் பெண் வீராங்கனைகளின் சாதனைகள், அதிர்ச்சித் தோல்வி மற்றும் திடீர் விலகல் என பல முக்கிய சம்பவங்கள் அரங்கேறின.

தங்கம் வென்ற முதல் குட்டி நாடு

பெண்களுக்கானடிரையத்லான்எனப்படுகின்ற மூவம்சப் போட்டியில் பெர்முடா வீராங்கனை புளோரா டபி தங்கப் பதக்கம் வென்றார்

33 வயதான புளோரா, ஒரு மணித்தியாலம் 55:36 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். பிரிட்டன் 2ஆம் இடத்தையும், அமெரிக்கா 3ஆம் இடத்தையும் பிடித்தன.

பெர்முடாவின் முதல் ஒலிம்பிக் தங்கம் இதுவாகும். மேலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் சிறிய நாடு இதுதான். பெர்முடாவின் சனத்தொகை 63 ஆயிரம். பரப்பளவில் அமெரிக்காவின் நியூயோர்க்கை விட 15 மடங்கு சிறியது. இதற்குமுன் 1976 ஒலிம்பிக்கில் ஆண்கள் குத்துச்சண்டையில் பெர்முடா நாட்டு வீரர் கிளாரன்ஸ் ஹில் வெண்கலம் வென்றிருந்தார்.

நான்காவது தடவையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற புளோரா டபி, 2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெர்முடா சார்பில் முதல் பதக்கம் வென்ற வீராங்கனையாக சாதனை படைத்தார்

நயோமி ஒசாகா அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்

உலக டென்னிஸ் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் நயோமி ஒசாகா, 42வது இடத்தில் உள்ள செக் குடியரசின் மார்கெடா வொன்ட்ரூசோவாவுடன் மோதினார்

இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வொண்ட்ரூசோவா முதல் செட்டை 6-1 என வென்றார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் சற்று வேகத்தை அதிகரித்து ஆடிய நவோமி சரிக்கு சமமாக புள்ளிகளை சேர்த்த போதிலும், இறுதியில் 4-6 என வொண்ட்ரூசோவா வெற்றிபெற, ஒசாகா டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒலிம்பிக் தங்கம் வென்ற கொரோனா வீரர்

ஐந்து மாத இடைவெளியில் இரண்டு தடவைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் டொம் டீன், டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் சாதாரண நீச்சலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

21 வயதுடைய டொம் டீன்னின் வெற்றியை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். காரணம், கடந்த ஜனவரி மாதம் 2ஆவது முறையாக கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். அதற்கு முன்பு செப்டம்பர் மாதம் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்

தான் கொரோனாவால் இரண்டு தடவைகள் பாதிக்கப்பட்டதை போட்டியின் பிறகு தான் அவர் முதல்தடவையாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

>> Photo ALbum – Day 4 – 2020 Tokyo Olympic Games <<

நீச்சலில் தங்கம் வென்ற 17 வயது வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பின்நோக்கிய நீச்சல் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை லிடியா ஜெகொபை தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் பிரிவில் அமெரிக்காவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த லிடியா, சக நாட்டு வீராங்கனையும், நடப்பு ஒலிம்பிக் சம்பியனுமான லில்லி கிங்கை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தென்னாபிரிக்காவின் தத்யானா ஷஜன்மாக்கர் தட்டிச் சென்றார். தங்கம் வெல்ல முனைப்புடன் இருந்த அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் வெண்கலம் வென்றார், இது ஒலிம்பிக்கில் இவரது 3வது பதக்கமாகும்.

>> ஒலிம்பிக்கில் கலக்கிய 13 வயது சிறுமியும், 58 வயது தாத்தாவும்

ஹெட்ரிக் சாதனை படைத்த சீன தாய்ப்பே வீராங்கனை

பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவு குழுபளுதூக்குதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில், சீன தாய்ப்பே வீராங்கனை கூ சிங் சுன் ஸ்னெட்ச் முறையில் 103 கிலோ எடையையும், கிளீன்  அண்ட் ஜேர்க் முறையில் 133 கிலோ எடையையும் என மொத்தமாக 236 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல்மூன்று ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். குறித்த எடைப்பிரிவில் உலக சாதனைக்கு சொந்தக்காரியும் இவர் தான்

இதேவேளை, துர்க்மெனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பொலினா குரேவா 217 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் துர்க்மெனிஸ்தான் வெல்லும் முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான்

இதனிடையே, ஜப்பான் வீராங்கனை மிகிகோ அண்டு 214 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

>> தோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன

சிமோன் பைல்ஸ் விலகல்

2016 ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் அணி நிலைப் போட்டியின் போது சிமோனின் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அணிகளுக்கான இறுதிப் போட்டியில் இருந்து விலகினார். இவர் விலகியதையடுத்து அமெரிக்கா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ரஷ்யா அணிக்கு தங்கம் கிடைத்தது.

பதக்கப்பட்டியலில் முன்னிலையில் ஜப்பான் Tokyo Olympic 2020

டோக்கியோ 4ஆவது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் ஜப்பான் உள்ளது. இதுவரை 10 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் 9 தங்கங்களுடன் அமெரிக்காவும், 3ஆவது இடத்தில் 9 தங்கங்களுடன் சீனாவும் உள்ளன

இதனிடையே ஒலிம்பிக்கின் ஐந்தாவது நாளான நாளைய தினம் 23 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<