டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

119

சிங்கர் 19 வயதுக்குட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2018/2019 பருவகாலத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் இன்றைய தினம் நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று மரபுரீதியான போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இன்று, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி எதிர் கோட்டே ஜனாதிபதி கல்லூரி, குருநாகல் மாலியாதேவ கல்லூரி எதிர் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மற்றும் மாத்தறை புனித தோமியர் கல்லூரி எதிர் அம்பலாங்கொட தர்மசோக கல்லூரி ஆகிய கல்லூரிகள் தங்களுடைய மரபுரீதியான போட்டிகளில் விளையாடியதுடன், வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கொழும்பு வெஸ்லி கல்லூரி ஆகிய அணிகள் பருவகால போட்டியில் விளையாடியன.

கொழும்பு தர்ஸடன் கல்லூரி எதிர் கோட்டே ஜனாதிபதி கல்லூரி

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  கோட்டே ஜனாதிபதி கல்லூரி அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 321 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

கோட்டே ஜனாதிபதி கல்லூரி அணிசார்பில் ரொசேன் சில்வா 59 ஓட்டங்கள், பவந்த ஜெயசிங்க 57* ஓட்டங்கள்,பிருவ்த்தி தாரக்ஷய 54 ஓட்டங்கள் மற்றும் சாலக பண்டார 41 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இராங்க அசான் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோட்டே ஜனாதிபதி கல்லூரி அணி, தர்ஸ்டன் கல்லூரி அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. டினித் நெலும்தெனிய அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சந்துரு டயாஸ் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 183 ஓட்டங்களால் பின்னடைவைச் சந்தித்திருந்த கோட்டே ஜனாதிபதி கல்லூரி மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்த அணி, 66.4 ஓவர்களுக்கு முகங்கொடுத்து, 287 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கோட்டே  ஜனாதிபதி கல்லூரி அணிசார்பில் அதிகபட்சட்சமாக தக்ஷில நிர்மால் 90 ஓட்டங்களையும், சஷிக நிர்மால் 63* ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துடன், விகும் கல்ஹார 63 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயற்பட்ட சந்துரு டயஸ் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் கோட்டே ஜனாதிபதி கல்லூரியின் ஆட்டத்துடன் போட்டி நடுவர்களால் நிறைவுசெய்யப்பட்டதுடன், போட்டி சமனிலையில் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.


குருநாகல் மாலியாதேவ கல்லூரி எதிர் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி

குருநாகல் மாலியாதேவ கல்லூரி மற்றும் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற மரபுரீதியான இந்தப்  போட்டியில் கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பண்டாரகம பொது மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாலியாதேவ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தடுமாற்றத்தை எதிர்கொண்ட மாலியதேவ கல்லூரி 49.1 ஓவர்களில் 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கயந்த விக்ரமத்தந்த்ரி 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அமித டபரே 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி அணி முதித் லக்ஷான் மற்றும் அபிஷேக் லியனாராச்சி ஆகியோரின் சதங்களுடன் உதவியுடன் 360/5d ஓட்டங்களை பெற்று, ஆட்டத்தை இடைநிறுத்தியது. முதித் லக்ஷான் 123 ஓட்டங்களையும், அபிஷேக் லியனாராச்சி 101 ஓட்டங்களையும் விளாசினர்.

பின்னர், 159 ஓட்டங்கள் பின்னடைவில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மாலியதேவ கல்லூரி, 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இஷான்ஜய ஹெட்டியாராச்சி அதிகபட்சமாக 76 ஓட்டங்களை பெற, முதித் லக்ஷான் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்படி 42 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிகளுக்கு 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதில் அமித டபரே ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களை பெற்றார்.


மாத்தறை புனித தோமியர் கல்லூரி எதிர் அம்பலாங்கொட தர்மசோக கல்லூரி

மாத்தறை உயனவத்த மைதானத்தில் நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான மரபுரீதியான போட்டியும் சமனிலையான முடிவை தந்திருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த புனித தோமியர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக ஆடிய மிஷால் அமோத் சதத்தினை பூர்த்திசெய்து, 122 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்து வீச்சில் நவீன் ரசங்க 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பலாங்கொட தர்மசோக கல்லூரி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. சஷிந்து மல்ஷான் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் கவிந்து ரித்மல் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழத்தினார்.

தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரி இன்றைய ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது. சஞ்சித ரணசிங்க ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், சச்சித்ர ரஷ்மிக 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.


வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கொழும்பு வெஸ்லி கல்லூரி

கொழும்பு வெஸ்லி கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பித்த வத்தளை புனித அந்தோனியார் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுள்ளது.

வெஸ்லி கல்லூரி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொவின் சுபேசிங்க 90 ஓட்டங்களையும், திசுரூக அக்மீமன 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், பிரைன் கருநாணயக்க 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். பந்து வீச்சில் பதும் விஹாங்க 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாள் ஆட்டம் நாளை காலை தொடங்கவுள்ளது.