தோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன

Tokyo Olympics - 2020

135

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பெட்மிண்டன் முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இலங்கையின் நிலூக கருணாரத்ன, அயர்லாந்து வீரர் குவெனிடம் தோல்வியைத் தழுவினார். 

இந்தத் தோல்வியன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் எந்தவொரு வெற்றியையும் பெறாமல் ஏமாற்றத்துடன் நிலூக கருணாரத்ன வெளியேறினார். 

டோக்கியோ ஒலிம்பிக் முதல் நாளில் இலங்கை வீரர்கள் பின்னடைவு

டோக்கியோவின் முசாஷினோ பொரஸ்ட் ப்ளாஸா உள்ளக அரங்கில் இன்று மாலை (26) நடைபெற்ற F குழுவுக்கான தனது இரண்டாவது போட்டியில் விளையாடிய நிலூக கருணாரத்ன, முதல் செட்டில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.  

இதன்படி, முதலாவது செட்டில் அயர்லாந்து வீரர் குவெனிக்கு ஓரளவு சவால் விடுத்த நிலூக, 16 – 21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார். 

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அபாரமாக விளையாடிய குவென், அந்த செட்டை 21 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கிக்கொண்டு 2-0 என நேர் செட்களில் நிலூக கருணாரத்னவை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார். 

முன்னதாக, கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்ப்பே வீரர் சூ வெய் வெங்கிடம் 2-0 என்ற நேர் செட்களில் நிலூக கருணாரத்ன தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் ஏமாற்றத்துடன் வெளியேறிய சாமர நுவன்

2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக் என தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நட்சத்திர பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்னவின் ஒலிம்பிக் பயணம் டோக்கியோ 2020 ஒலிம்பிக் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. 

உள்ளூர் பெட்மிண்டன் போட்டிகளிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் தேசிய சம்பியன் பட்டத்துடன் ஓய்வுபெற்ற நிலூக கருணாரத்ன பங்குபற்றிய கடைசி ஒலிம்பிக் விளையாட்டு விழா இதுவாகும். 

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<