டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி

364
(Photo by Cameron Spencer/Getty Images)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் டிம் பெய்னின் போட்டிக்கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தரமிறக்கல் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியின், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, டிம் பெயன் நடுவரின் தீர்ப்பினை ஏற்க மறுத்த காரணத்தால், இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

>> உபாதைகளால் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணி

போட்டியில், டிம் பெய்ன் மேற்கொண்ட நடுவர் மேன்முறையீடு, பயன்படாத நிலையில், அவர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போட்டியின் 56வது ஓவரில், சோர்ட் லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட, நெதன் லயோன் செட்டேஸ்வர் புஜாராவின் பிடியெடுப்பை எடுத்ததாக நினைத்திருந்தார்.   

எனினும், கள நடுவர் துடுப்பாட்ட வீரரின் மட்டையில் பந்து படவில்லை என்ற காரணத்தால், ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தார். எனினும், டிம் பெய்ன் அதனை ஆட்டமிழப்பாக கருதி, நடுவர் மேன்முறையீட்டை மேற்கொண்டார். 

பின்னர், இந்த ஆட்டமிழப்பை ப்ரூஸ் ஒக்ஸன்போர்ட் ஆராய்ந்ததில், ஹொட்ஸ்பொர்ட் (HotSpot ) மற்றும் சின்கோவில் (Snicko) துடுப்பாட்ட மட்டையில் பந்து படும், சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால், கள நடுவர்களின் தீர்ப்பின்படி, அது ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தார்.

எனினும், அதனை ஆட்டமிழப்பாக கருதிய டிம் பெய்ன், கள நடுவரான போல் வில்ஸனுடன், கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டார். இந்த விடயம் ஆடுகளத்தில் உள்ள ஸ்டம்ப் ஒளிவாங்கியில் பதிவாகியது. இதனால், ஐசிசியின் 2.8 என்ற சரத்தின் படி, வீரர்களுக்கான உதவி அதிகாரிகளுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்ட காரணத்தால், டிம் பெய்னுக்கு மேற்குறித்த தண்டனை வழங்கப்பட்டது. 

அத்துடன், இந்த தொடரானது நடுவர் மேன்முறையீட்டில் ஒரு மோசமான தொடராக டிம் பெய்னுக்கு அமைந்து வருகின்றது. குறிப்பாக ரிஷப் பாண்ட்டின் பிடியெடுப்புக்கான நடுவர் மேன்முறையீடு ஒன்றும் தவறியிருந்தது. இதனால், ஆடுகளத்தை டிம் பெய்ன் காலால் உதைத்திருந்தார்.  

ஆட்டநேரத்தின் பின்னர், போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் மேற்கொண்ட விசாரணையில், டிம் பெய்ன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கான இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தேவையில்லை எனவும் போட்டி மத்தியஸ்தர் அறிவித்துள்ளார். 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<