உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா

4420

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் அணிக்கும் இடையில் அடுத்த மாத இறுதியில் (மே 31) புயல் நிவராண நிதிக்காக விஷேட T20 போட்டியொன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டிக்கான உலக பதினொருவர் அணியில், T20 உலக சம்பியன்ஷிப் பட்டத்தினை வென்ற  நாடுகளின் வீரர்களான சஹித் அப்ரிடி, சொஹைப் மலிக் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள்…..

அண்மையில் கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல்களினால் அங்குள்ள கிரிக்கெட் மைதானங்களும், ஏனைய கிரிக்கெட் உட்கட்டமைப்பு வசதிகளும் பாதிப்புக்குள்ளாகியிருந்தன. பாதிப்படைந்த இந்த மைதானங்களினையும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளையும் புணரமைக்க நிதி திரட்டும் நோக்கோடு நட்சத்திர வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இந்த T20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேட T20 போட்டிக்கான உலக பதினொருவர் அணியில் அடக்கப்பட்டுள்ள சொஹைப் மலிக் மற்றும் சஹீத் அப்ரிடி ஆகியோர் 2009ஆம் ஆண்டுக்கான T20 உலக சம்பியன் பட்டத்தினை பாகிஸ்தான் வெல்லும் போது அவ்வணிக் குழாத்தில் காணப்பட்டிருந்தவர்கள் என்பதோடு, இலங்கை 2014ஆம் ஆண்டுக்கான T20 உலக சம்பியன்ஷிப் பட்டத்தினை வெல்லும் போது இலங்கை குழாத்தில் திசர பெரேரா காணப்பட்டிருந்தார்.

இதுதவிர T20 உலக சம்பியன்ஷிப் தொடரினை வென்ற மற்றுமொரு நாடான இங்கிலாந்தின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் இயன் மோர்கன் இந்த விஷேட போட்டிக்கான உலக பதினொருவர் அணியினை தலைமை தாங்குகின்றார்.

இந்த விஷேட T20 போட்டி பற்றி கருத்து தெரிவித்த சஹீத் அப்ரிடி, “இப்போட்டி நடைபெற லோர்ட்ஸ் மைதானம் சிறந்த இடமாக அமைகின்றது. எனக்கு இந்த மைதானம் பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வருகின்றது. நான் 1999ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியிலும், 2009ஆம் ஆண்டுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இங்கே ஆடினேன். எனவே, இங்கே மீண்டும் ஒரு தடவை கிரிக்கெட் இரசிகர்களுக்கு பொழுதுபோக்கு வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

சொஹைப் மலிக் கருத்து தெரிவிக்கும் போது, “ இப் போட்டிக்கான குழுவில் நான் இருப்பது, எனக்கு நல்ல காரியம் ஒன்றுக்கு பங்களிப்புச் செய்ய ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்ட இரண்டு புயல்களும் அங்கே எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது என்பது எமக்கு தெரியும். இப்படி பாதிக்கப்பட்ட மைதானங்களினை புணரமைப்புச் செய்வதற்கு நிதி திரட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஒன்று சேர்வது நல்ல நிகழ்வாகும். “ எனக் கூறினார்.

லங்கன் பிரீமியர் லீக் தொடரின் அவசியத்தை விளக்கும் ரசல் ஆர்னோல்ட்

கடந்த காலங்களில் திறமைமிக்க வெளிநாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கும் உள்ளூர்……

இலங்கை அணி சார்பாக இந்த  விஷேட T20 போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட திசர பெரேரா, “ நான் உலக பதினொருவர் கிரிக்கெட் அணிக்காக இரண்டாவது தடவை விளையாடுவதை கெளரவமாக கருதுகின்றேன். நான் இறுதியாக உலக பதினொருவர் அணிக்காக லாஹூரில் பாகிஸ்தானுடன் இடம்பெற்ற (T20) தொடரில் விளையாடினேன். இதே போன்று மீண்டும் உலகில் காணப்படும் சிறந்த வீரர்கள் அடங்கிய அணிக்காக லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடப்போகும் போட்டிக்காக ஆர்வமாக இருக்கின்றேன். வெவ்வேறு நாடுகளினது உயர் நிலையிலுள்ள வீரர்களுடன் இணைந்து விளையாடுவது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு உச்சப்புள்ளி நிகழ்வாகும். “

“மறுமுனையில், எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது. ஏனெனில், இந்த வாய்ப்பு எனக்கு, மிகவும் நல்ல காரியம் ஒன்றுக்கு பங்களிப்புச் செய்ய கிடைத்த சந்தர்ப்பமாகும். மேற்கிந்திய தீவுகளில் பழுதடைந்த மைதானங்களினை மீண்டும் கிரிக்கெட் வீரர்கள் சீரமைக்க முன்வருவது, பாராட்டப்படவேண்டிய நிகழ்வாகும். மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் உலகுக்கு கடந்த காலங்களில் பல விதமாக பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். எனவே, எங்களது சந்ததியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தரும் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான். “ எனப் பேசியிருந்தார்.

உலக பதினொருவர் அணியினை இந்த விஷேட T20 போட்டியில் எதிர்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் தரப்பை  கர்லோஸ் பரத்வைட் தலைமை தாங்குவதோடு இந்த அணியில் கிறிஸ் கெயில், மார்லோன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி மற்றும் அன்ட்ரு ரசல் போன்ற அதிரடி வீரர்கள் காணப்படுகின்றார்கள். இந்த வீரர்கள் அனைவரும் இரண்டு வருடங்களின் முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலக சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியாளராக மாற முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் மூலம் சேகரிக்கப்படும் நிதி, மேற்கிந்திய தீவுகளில் இர்மா மற்றும் மரியா புயல்களினால் பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களினையும் புணரமைக்க பயன்படுத்தப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும்.