இரண்டாவது முறை T20 உலகக் கிண்ண சம்பியனாகுமா இந்தியா?

207
Team India - Preview ICC World T20 2021

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத்தில் நேரடியாகவே சுபர் 12 சுற்றுக்கு தொடரினை நடாத்தும் நாடாக (Host) தகுதி பெற்ற இந்தியா, இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை வெல்ல எதிர்பார்க்கப்படும் மிகப் பிரதான அணியாக காணப்படுகின்றது. 

அதன்படி சுபர் 12 சுற்றில் குழு 2 இல் இடம்பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி தமது முதல் T20 உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியினை எதிர்வரும் 24ஆம் திகதி பாகிஸ்தானுடன் ஆரம்பம் செய்கின்றது. 

>> T20 தலைவர் பதவியிலிருந்து விலகும் விராத் கோஹ்லி

கடந்தகாலம்

முதன்முறையாக T20 உலகக் கிண்ணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போது அதன் வெற்றியாளர்களாக இந்திய கிரிக்கெட் அணி மகுடம் சூடியிருந்தது. இதன் பின்னர், அவ்வணி கடந்த 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான போதும் அதில் இலங்கை அணியிடம் தோல்வியினை தழுவியது. இதன் பின்னர், கடைசியாக நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி அதில் இங்கிலாந்துடன் தோல்வியினை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் இலங்கைக்கு அடுத்து T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக சதவீதத்தில் (64.06%) வெற்றிகளை பதிவு செய்த அணியாக காணப்படும் இந்தியா, கடந்த கால T20 உலகக் கிண்ணத் தொடர்களில் மொத்தம் 33 போட்டிகளில் ஆடி 20 போட்டிகளில் வெற்றியினையும், 11 போட்டிகளில் தோல்வியினையும், ஒரு போட்டியினை சமநிலை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தயார்படுத்தல்கள் 

நடைபெறும் T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகிய அணிகளை புள்ளிகள் வழங்கி தயார்படுத்தினால் அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியாக இந்தியா காணப்படும். ஏனெனில், இந்திய கிரிக்கெட் அணியே நடைபெறுகின்ற T20 உலகக் கிண்ணத்தொடருக்கு அதிக பயிற்சிகள் எடுத்த அணியாக கருதப்படுகின்றது. 

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள், இந்திய அணி T20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஆடவிருக்கின்ற அதே ஐக்கிய அரபு இராச்சியத்திலயே நடைபெற்றிருந்தன. எனவே, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னரே ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆடுகள நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் வெளிப்பாட்டினை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் விளையாடிய பயிற்சிப் போட்டியில் அவதானிக்க முடியுமாக இருந்தது.   

இது தவிர ரவி சாஸ்திரி உள்ளடங்கலாக மிகச் சிறந்த பயிற்றுவிப்புக் குழாத்தினை ஏற்கனவே கொண்டிருக்கும் இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மூன்று வகைக் கிண்ணங்களையும் தனது தலைமையில் வெற்றி கொண்ட மஹேந்திர சிங் டோனி இந்த T20 உலகக் கிண்ணத்தில் ஆலோசகராக (Mentor) நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

எனவே, இந்திய கிரிக்கெட் அணி இந்த இந்த T20 உலகக் கிண்ணத்தில் மிகச் சிறந்த பயிற்றுவிப்பு தொகுதியினை கொண்ட வலுவான அணியாக பார்க்கப்படுகின்றது. 

அணிக்குழாம் 

இந்திய அணியின் வீரர்கள் குழாத்தினை நோக்கும் போது அவ்வணியில் T20 உலகக் கிண்ணத்திற்காக இணைக்கப்பட்ட வீரர்களான அணித்தலைவர் விராட் கோலி, இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் இந்திய அணி அண்மையில் விளையாடியிருந்த சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் சரி, நடைபெற்று முடிந்த இந்திய பிரீமியர் லீக்கிலும் சரி சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. 

>> T20 உலகக் கிண்ண இந்திய அணியில் மாற்றம்

இவர்கள் தவிர, ரோஹிட் சர்மா, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ரிஷாப் பாண்ட், கே.எல். ராகுல் போன்ற வீரர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு பெறுமதி சேர்க்கின்றனர். 

இதேநேரம் இந்திய அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது மாயஜால சுழல்வீரர் வருண் சக்கரவர்த்தி, வேகப் பந்துவீச்சாளர்களான மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரும், சகலதுறைவீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றோரும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். 

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

விராட் கோலி – முன்னர் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விராட் கோலி கடைசியாக இந்திய கிரிக்கெட் அணியினை வழிநடாத்தும் T20 உலகக் கிண்ணத்தொடர் இதுவாகும். 

>> T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை என்ன?

விராட் கோலி T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 86.33 என்கிற மிகச் சிறந்த துடுப்பாட்ட சராசரியுடன் கடந்த காலங்களில் 777 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுகள் விராட் கோலி T20 உலகக் கிண்ணத் தொடர்களில் வெளிப்படுத்திய ஆதிக்கத்திற்கு சான்றாக இருக்கின்றது. எனவே, நடைபெறப் போகும் இந்த T20 உலகக் கிண்ணத்திலும் விராட் கோலி இந்திய அணியின் முக்கிய எதிர்பார்ப்பாக காணப்படுகின்றார். 

கே.எல். ராகுல் – அதிரடி துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுல் இந்திய கிரிக்கெட் அணிக்காக எந்த இடத்திலும் ஆடும் வல்லமை கொண்ட துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றார். இந்தியா – இங்கிலாந்து அணியுடன் T20 உலகக் கிண்ணத்திற்காக ஆடிய பயிற்சிப் போட்டியில் அதிரடி அரைச்சதம் ஒன்று விளாசிய கே.எல். ராகுல், நடைபெற்று முடிந்த இந்திய பிரீமியர் லீக் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் பெற்ற ஒருவராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  KL RAHUL

எனவே, ஆரம்பத்துடுப்பாட்டமோ அல்லது மத்திய வரிசையோ, பின்வரிசையோ என எதிலும் இந்திய அணியினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட கே.எல். ராகுல் நடைபெறப் போகும் தொடரிலும் இந்திய அணியின் துருப்புச்சீட்டு வீரர்களில் ஒருவராக காணப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இறுதியாக, 

இந்திய கிரிக்கெட் அணி பலமிக்க அணிகளில் ஒன்றாக T20 உலகக் கிண்ணத்திற்குள் வந்த போதும் அவ்வணிக்கு மிகப் பெரிய சவால், இந்த T20 உலகக் கிண்ணத்தில் காத்திருக்கின்றது. சில நேரங்களில் நாம் எதிர்பார்க்கும் அணிகளும் எங்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படும். எனவே, முடிவுகளை அறிந்து கொள்ள இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் நிறைவடையும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

இந்திய அணிக்குழாம்

விராட் கோஹ்லி (தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பாண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிசந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் ஷமி

இந்திய அணியின் போட்டிகள் 

  • எதிர் பாகிஸ்தான் – டுபாய் – ஓக்டோபர் 24
  • எதிர் நியூசிலாந்து – டுபாய் – ஓக்டோபர் 31
  • எதிர் ஆப்கானிஸ்தான் – அபுதாபி – நவம்பர் 03
  • எதிர் B1 அணி – டுபாய் – நவம்பர் 05 
  • எதிர் A2 அணி – டுபாய் – நவம்பர் 08

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<