மிக்கி ஆர்தர், திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று!

266

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்காக தயாராகிவரும் இலங்கை அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். (PCR) பரிசோதனையில், மிக்கி ஆர்தர் மற்றும் திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Read : உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ள இலங்கை வீரர்கள்!

இலங்கை குழாத்துக்கான இந்த பி.சி.ஆர். பரிசோதனை நேற்று (02) வீரர்கள், அதிகாரிகள், வலைப் பந்துவீச்சாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையில் மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொவிட்-19 சுகாதார கொள்கையை இவர்கள் கடைப்பிடிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த இருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 5ம் திகதி சுகததாஸ அரங்கில் நடத்தப்படவிருந்த, வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் இம்மாதம் 20ம் திகதி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், தற்போதுள்ள நிலையில், தொடரை ஒத்திவைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா? என இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியானது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய கடந்த 28ம் திகதி மூன்று குழுக்களாக பிரிந்து பயிற்சிகளை மேற்கொண்டுவந்தது. இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபை தொடர்ந்தும், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தங்களுடைய பணிகளை முன்னேடுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க