பாடசாலை மெய்வல்லுனரில் நதுன், தருஷி சிறந்த வீரர்களாக முடிசூடல்

All Island School Games 2022

160

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற 36ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (06) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இம்முறை போட்டித் தொடரில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நதுன் பண்டர தெரிவானார்.

இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 13.64 செக்கன்களில் நிறைவு செய்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் கனிஷ்ட தேசிய சாதனையையும், தெற்காசிய கனிஷ்ட சாதனையையும் அவர் சமப்படுத்தியிருந்தார். இதனால் இம்முறை போட்டித் தொடரில் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான அதிசிறந்த ஓட்ட வீரருக்கான விருதையும், சட்டவேலி ஓட்டப் போட்டிகளுக்கான அதி சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், வருடத்தின் அதி சிறந்த பெண் மெய்வல்லுனராக 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியை 54.22 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற வலள ஏ ரத்நாயக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன தெரிவானார்.

அத்துடன், அவர் இம்முறை போட்டித் தொடரில் பெண்களுக்கான 200 மீட்டர் மற்றும் பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்று ஹெட்ரிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இதனிடையே, எறிதல் நிகழ்ச்சிகளில் அதிசிறந்த வீரருக்கான விருதை பாணந்துறை றோயல் கல்லூரியைச் சேர்ந்த ஜயவி ரத்தித பெற்றுக்கொண்டார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 16.94 மீட்டர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

அத்துடன், பாய்தல் நிகழ்ச்சிகளில் அதி சிறந்த வீரருக்கான விருதை யொசிதா சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஏ.கே கோரல பெற்றுக் கொண்டார். இவர் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.57 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

>> பாடசாலை மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்ற தருஷி

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 2ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 4 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை மெய்வல்லுனர் போட்டியில் 24 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 14 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 10 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

ஒட்டுமொத்த சம்பியனாகியது மேல்மாகாணம்

இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1096.5 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மேல்மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

464.5 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 375 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட தென் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த காலங்களைப் போல இம்முறையும் கிழக்கு மாகாணம் 61 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது. 2018இல் 28 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட அந்த மாகாணம், 2019இல் 78 புள்ளிகளைக் குவித்தது.

>> Photos – All Island School Games 2022 | Day 5 

இதேவேளை, 157.5 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வட மாகாண அணி, 7ஆவது இடத்தைப் பிடித்தது. இறுதியாக 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட மாகாணம் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த சம்பியன்கள்

14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள் சம்பியனாக வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக மொனராகல விஜயபுர வித்தியாலயமும் தெரிவாகின.

அத்துடன், 16 வயதுக்குட்பட்ட பிரிவின் ஆண்கள் சம்பியனாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவ கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக அம்பகமுவ மகா வித்தியாலயமும் தெரிவாகின.

இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள் சம்பியனாக நீர்கொழும்பு மாரிஸ்டெல்ல கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவ கல்லூரியும் தெரிவாகின.

அதேபோல, 20 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள் சம்பியனாக மாத்தறை ராகுல கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக வலள ஏ. ரத்நாயக மத்திய மகா வித்தியாலயமும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 36ஆவது அகில இலங்கை பாடசாகைள் விளையாட்டு விழாவில் ஆண்கள் பிரிவில் 81 புள்ளிகளைப் பெற்ற வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை ஒட்டுமொத்த சம்பியனானது.

அதேபோல, பெண்கள் பிரிவில் 122 புள்ளிகளைப் பெற்ற வலள ஏ. ரத்நாயக மத்திய மகா வித்தியாலயம், தொடர்ச்சியாக 17ஆவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<