பாடசாலை மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்ற தருஷி

All Island School Games 2022

179

கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 36ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (02) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் 3 நாட்களின் முடிவில் 12 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 7 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 5 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் கொழும்பு பிஷொப் கல்லூரியைச் சேர்ந்த ஒவினி சந்த்ரசேகர 12.72 மீட்டர் தூரத்தைத் எறிந்து இம்முறை போட்டிகளில் முதலாவது போட்டிச் சாதனையை நிகழ்த்தினார்.

>> அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் நாளை ஆரம்பம்

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்நாயக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன 54.8 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன், நேற்று (04) நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 24.83 செக்கன்களில் நிறைவு செய்த அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

அதேபோல, பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தலைமையிலானவலள ஏ ரத்நாயக மகா வித்தியாலயம் அணி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இதன்மூலம் இம்முறை போட்டிகளில் ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்று தருஷி கருணாரத்ன சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 12.6 செக்கன்களில் நிறைவு செய்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த உமாயா ரத்நாயக புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்ல, 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஷானி ஷெஹாரா புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 5.32 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார்.

இதனிடையே, மாத்தறை லீட்ஸ் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த தினெத் வீரரட்ன, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் 2 புதிய போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் காலி கனுமல்தெனிய வித்தியாலயத்தைச் சேர்ந்த குஷான் குமாரநாயக, போட்டியை 11.85 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனை படைக்க, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் நதுன் பண்டார புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார். போட்டியை அவர் 13.82 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதனிடையே, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பாணந்துறை றோயல் கல்லூரியைச் சேர்ந்த ஜயவி ரத்தித 16.94 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்த, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தைச் சேர்ந்த உவிது சுதாரக விஜேசிங்க 15.43 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

4ஆவது நாள் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (05) நடைபெறவுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<