இளம் வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வாலுக்கு சச்சினின் அறிவுறை

314
Image courtesy - Rediff and HindusanTimes

இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியில் அறிமுகமாகியுள்ள பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த யசஷ்வி ஜெய்ஸ்வாலை கிரிக்கெட்டில் அதிகமான கவனத்தை செலுத்துமாறு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுறை கூறியுள்ளார்.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் பின்தங்கிய பிரதேசமொன்றில் பிறந்த யசஷ்வி ஜெய்ஸ்வால், மும்பை வந்து கூடாரத்தில் தங்கி, பாணி பூரி விற்று பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்தார்.

அவமானங்கள் பல தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்…

ஒரு மனிதனை அவனது வாழ்க்கையில்..

முதன்முதலாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய யசஷ்வி ஜெய்ஸ்வால், தனது முதலிரண்டு போட்டிகளிலும் 15, 1 என குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததனால், அடுத்த போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் தனது முயற்சியை கைவிடாத ஜெய்ஸ்வால் அடுத்த வாய்ப்பை வேண்டிக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இவரின் முயற்சியின் பலனாக இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. தொடர் 2-2 என சமனிலையில் இருந்ததுடன், அணியும் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.  இந்த போட்டியில் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் தனது துடுப்பாட்டம் தொடர்பிலும், தனக்கு அறிவுறை கூறிய சச்சின் டெண்டுல்கர் தொடர்பிலும் யசஷ்வி ஜெய்ஸ்வால் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் அது குறித்து குறிப்பிடுகையில்,

“அணியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டேன். வாய்ப்பு கிடைத்தால் 100 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தவுடன் அதனை பயன்படுத்திக்கொண்டேன். முக்கியமான போட்டியில் வாய்ப்பு கொடுத்தமைக்கு தொடரின் பயிற்றுவிப்பாளர் ராமன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

எனது குறிக்கோள் ஓட்டங்களை குவிப்பதும், விக்கெட்டுகளை கைப்பற்றுவதுமாகும்.  ரஞ்சி கிண்ணத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். அப்படி வாய்ப்பு கிடைக்குமானால் எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன்”

சச்சின் டெண்டுல்கரின் சந்திப்பு குறித்து குறிப்பிடுகையில்,

“அவர் என்னை வீட்டுக்கு அழைத்து துடுப்பாட்ட மட்டையொன்றை பரிசாக வழங்கினார். அத்துடன் சுமார் 40 நிமிடங்கள் வரை என்னுடன் கலந்துரையாடினார்.  சச்சின் அவர்களை சந்திப்பது எனது கனவு. அவர் எதிர்காலம் மற்றும் இறந்தகாலம் தொடர்பில் சிந்திக்க வேண்டாம் எனவும், ஆட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் கூறினார்” என யசஷ்வி ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<