விண்மீனுக்குத் தெரியாமலே குறிஞ்சிக்குமரனுக்கு வெற்றி

349

மைதானம் தொடர்பான தொடர்பாடல் தவறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டு  நடைபெறாத குப்பிளான் குறிஞ்சிக்குமரன் (வலிகாமம் லீக்) மற்றும் பலாலி விண்மீன் (பருத்தித்துறை லீக்) ஆகிய அணிகளுக்கிடையேயான FA கிண்ண  போட்டியின்  வெற்றி, விண்மீன் அணிக்குத் தெரியப்படுத்தாமலே குறிஞ்சிக்குமரன் அணிக்கு வழங்கப்பட்டுள்ளமை தற்பொழுது பலர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குப்பிளான் குறிஞ்சிக்குமரன் – விண்மீன்கள் இடையேயான போட்டியில் குழப்ப நிலை

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கால்பந்து லீக்கினைச் சேர்ந்த குப்பிளான் குறிஞ்சிக்குமரன் மற்றும் பருத்தித்துறை கால்பந்து லீக்கினைச்..

இந்தப் பருவகால FA கிண்ணச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமாக குப்பிளான் குறிஞ்சிக்குமரன் மற்றும் பலாலி விண்மீன் ஆகிய அணிகளுக்கிடையே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று இடம்பெறவிருந்தது. எனினும், தொடர்பாடல் தவறு காரணமாக போட்டி இடம்பெறவில்லை.

இந்நிலையில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட இரண்டாவது சுற்று ஆட்டங்களின் முடிவுகளை அவதானிக்கையில், நடைபெறாத குறித்த போட்டியில் 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் குறிஞ்சிக்குமரன் அணி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக குறிஞ்சிக்குமரன் அணியின் பயிற்றுவிப்பாளர் சுரேந்திரன் அவர்களை ThePapare.com தொடர்புகொண்டபோது, குறித்த போட்டியானது பலாலி விண்மீன் அணியினுடைய சொந்த மைதானத்தில் இடம்பெற வேண்டிய போட்டி. அன்றைய தினத்தில் போட்டி இடம்பெறாமைக்கு விண்மீன் அணியினரே காரணம் என்பதனால் எமக்கு  வெற்றியை வழங்குவதாகவும் அடுத்த சுற்று ஆட்டத்திற்குத் தயாராகுமாறும் உதைபந்தாட்ட சம்மேளனத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தாம் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பங்கெடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இது குறித்து விண்மீன் அணியின் பொருளாளர் யூட்டன் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி போட்டியின் முடிவு தொடர்பாக எமக்கு எதுவிதமான தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. இதுவரையில் தாம் மீள்போட்டியையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

குறித்த தினத்தன்று மைதானத்திலிருந்தவாறே உதைபந்தாட்ட சம்மேளனத்தினைத்  தொடர்புகொண்டபோது அவர்கள் எதுவிதமான பதிலையும் எமக்குத் தரவில்லை. தாம் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை லீக்கினருக்கும் தெரியப்படுத்தினோம். அவர்களும் எதுவிதமான பதிலையும் தரவில்லை என்றார்.

அதேவேளை, போட்டி இடம்பெறாமல் குறிஞ்சிக்குமரன் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு அனுமதித்தமை மற்றும் பருத்தித்துறை லீக், உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன மேற்படி பிரச்சனை தொடர்பாக அக்கறை காட்டமை குறித்து தனது அதிருப்தியையும் அவர் வெளியிட்டார்.

இந்த சம்பவத்தைப் பார்க்கும்பொழுது, குறித்த தின்னத்தில் இரு அணியினரும் ஒரே மைதானத்தில் இருக்க, நடுவர்கள் வேறு மைதானத்திற்கு சென்றுள்ளனர். எனவே, இது குறித்த ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ளும் முகமாக எதுவிதமான விசாரணைகளும் இன்றி ஓர் அணிக்குத் தெரியப்படுத்தாமல் மற்றைய அணிக்கு வெற்றியை வழங்கிய உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் இச்செயல் நியாயமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமது சொந்தக் காணி இதுவரையில் விடுவிக்கப்படாமல் இருக்கையிலும், வேறு மைதானங்களைப் பயன்படுத்தி யாழின் முன்னனி அணிகளுள் ஒன்றாகத் திகழ்ந்துவரும் விண்மின் அணிக்கு, இரண்டாவது முறையாக FA கிண்ணப் போட்டிகளில் தவறிழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடமும் இவர்கள் மன்னார் வரை சென்று போட்டி இடம்பெறாமல் திரும்பி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் இந்த விடயம் தொடர்பில் அறிய நாம் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தை தொடர்புகொள்ள முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை.

விண்மீன் அணிக்கு தெரியப்படுத்தாமலும், உரிய விசாரணைகள் இன்றியும் எதிரணிக்கு வெற்றி வழங்கப்படக் காரணம் என்ன?

மேற்படி விடயத்தில் அக்கறை கொள்ளாது பருத்தித்துறை லீக் செயற்படுவது ஏன்?    

இதற்காக வீண்மின் அணியினருக்கு உதைபந்தாட்ட சம்மேளனம் வழங்கவிருக்கும் தீர்வு என்ன?  

உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடுங்கள்