ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இளம் வீராங்கனை செல்ஸி மெலனி

228

இலங்கையின் வளர்ந்துவரும் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான செல்ஸி மெலனி பென்தரகே தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு இடைக்கால தடைவிதிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள காலிங்க குமாரகே

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில்…

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின்போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்துக்கு கடிதம் மூலம் இலங்கை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனம் (ஸ்லாடா) அறிவித்துள்ளது.

தேசிய விளையாட்டு விழாவில் தென் மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பங்குகொண்ட 17 வயதான செல்ஸி, குறித்த போட்டியில் 2ஆவது சுவட்டில் ஓடியிருந்ததுடன், அந்த அணிக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.

அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பென்தர காமினி மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட செல்ஸி மெலனி பென்தரகே புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றதுடன், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலை அணி, பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தது.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை கபடி வீரர்கள்

கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது..

அதற்குமுன் நடைபெற்ற சேர். ஜோன் டர்ர்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் பங்குகொண்ட செல்ஸி மெலனி தலைமையிலான காமினி மத்திய கல்லூரி அணி, பெண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் 15 வருட சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்ட இரண்டாவது மெய்வல்லுனராக செல்ஸி மெலனி பென்தரகே மாறினார்.

முன்னதாக, இலங்கையின் அதிசிறந்த மெய்வல்லுனர்களில் ஒருவரான 400 மீற்றர் ஓட்ட வீரர் காலிங்க குமாரகேம தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்காலிக தடைக்குள்ளாகியிருந்தார்.

எனவே, தேசிய மட்டத்தில் பிரகாசித்து வருகின்ற திறமையான சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களை இலக்காகக் கொண்டு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்ற போர்வையில் இவ்வாறு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை வழங்கி வருகின்ற மர்ம நபர்களை இனங்காண்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<