ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள காலிங்க குமாரகே

192

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த காலிங்க குமாரகே, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக விளையாட்டு சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குற்றம் உறுதி செய்யப்படுமாயின் அவருக்கு நீண்டகால தடை விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2018இல் தேசிய, சர்வதேச மட்டத்தில் ஜொலித்த நம்மவர்கள்

2018ஆம் ஆண்டானது பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டித்…

இலங்கை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரின் போது, காலிங்க குமாரவிடமிருந்து எடுக்கப்பட்ட பி (B Sample) பரிசோதனை மாதிரிகளில், சர்வதேச ஊக்கமருந்து  தடுப்பு சபையால் தடை செய்யப்பட்ட ஸ்டீரோய்ட் (steroid) என்ற ஊக்கமருந்து வகையை காலிங்க பயன்படுத்தியிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இம்மாத ஆரம்பத்தில் காலிங்க குமாரகே மேற்கொண்ட ஊக்கமருந்து பரிசோதனையிலும், தடை செய்யப்பட்ட ஸ்டீரோய்ட் வகை ஊக்கமருந்தினை அவர் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள குறுந்தூர ஓட்ட வீரர்களில் 400 மீற்றர் தூரத்தை 46 செக்கன்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நிறைவு செய்த வீரர்களில் காலிங்க குமார ஒருவராவார். இவர் கடந்த வருடம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் 45.99 செக்கன்களில் போட்டித் தூரத்தை (400 மீற்றர்) நிறைவு செய்திருந்தார். அத்துடன், நடந்து முடிந்த இராணுவ மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் 200 மீற்றர் தூரத்தை 21 செக்கன்களில் நிறைவுசெய்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் ஒரு அங்கமாக இருந்த இவர், அடுத்து வரவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் முக்கிய வீரராக பார்க்கப்பட்டு வந்தார். குறிப்பாக இலங்கையின் அஞ்சலோட்ட அணியை அடுத்து வரவிருக்கும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள் மற்றும் அடுத்து வரும் பல்வேறு மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் தடைக்கு முகங்கொடுத்துள்ள இரண்டாவது வீரராக காலிங்க குமாரகே இடம்பிடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையின் மற்றுமொரு 400 மீற்றர் ஓட்ட வீரரான பிரதீப் குமார ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்காக நான்கு வருட தடைக்கு முகங்கொடுத்துள்ளார். இவர் கடந்த வருடம் ஆசிய சம்பியன்ஷிப் தொடருக்காக இந்தியா சென்றிருந்த நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்ட பின்னர், உடனடியாக நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.

2018 இல் விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்

விளையாட்டு உலகில் 2018 ஆம் ஆண்டானது சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் …

இந்த நிலையில், குறித்த ஊக்கமருந்து விவகாரங்கள் தொடர்பில் விசாரணை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை ஊக்கமருந்து தடுப்பு பிரிவு சுயாதீன குழுவொன்றை நியமித்துள்ளது. இதன்படி, குற்றங்கள் உறுதி செய்யப்படுமாயின் தண்டனை விபரங்களை ஒழுக்காற்று குழு அறிவிக்கும். இவ்வாறு காலிங்க குமாரகே ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்படுமானால், அவருக்கு விளையாட்டுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு குறைந்தது 4 ஆண்டுகால தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, குறித்த வீரருக்கு ஊக்கமருந்தினை பெற்றுக்கொள்வதற்கு உதவிகளை வழங்கிய, அதற்கு அனுமதித்த அல்லது ஊக்கமருந்தினை பரிமாறிய நபர்கள் தொடர்பிலான விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, நபர்கள் தொடர்புற்றிருந்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டயையை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்,  காலிங்க குமாரகேவின் குற்றம் உறுதிசெய்யப்பட்டு, ஒழுக்காற்று குழுவினால் தண்டை வழங்கப்படுமாயின், குறித்த முடிவினை மீளாய்வு செய்யவதற்கான நடவடிக்கைகளில் குமாரகே ஈடுபட முடியும். அதேநேரம், குறித்த மீளாய்வும் அவருக்கு நம்பிக்கை தரவில்லை என்றால், விளையாட்டு தீர்ப்பாய நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<