இந்திய அணியில் கால்பதிக்க உள்ள ஐந்து அறிமுக வீரர்கள்

India Tour OF Sri Lanka - 2021

204
 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் 28ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் கடந்த 14ஆம் திகதி முதல் மும்பையில் தனிமைப்படுத்தலை கடைபிடித்து வருகின்றனர்

இதில் விராத் கோஹ்லி தலைமையிலான சிரேஷ் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது

இதன் காரணமாக இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் விஜய் ஹசாரே, ஷையத் அலி முஷ்டாக் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு அந்நாட்டு தேர்வாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள்.  

அதன்படி, முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐந்து வீரர்கள் தேர்வாகி உள்ளனர்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல், கிருஷ்ணப்பா கௌதம் தேர்வாகி உள்ளனர். இதில் தேவ்தத் படிக்கல் IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், கிருஷ்ணப்பா கௌதம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.  

இவர்கள் தவிர, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சேத்தன் சக்காரியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களும் முதல்முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.  

அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி அறிமுக வீரராக இந்த தொடரில் களமிறங்க உள்ளார்

எனவே, இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஐந்து அறிமுக வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்

தேவ்தத் படிக்கல் (20 வயது)

இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம், IPL தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தேவ்தத் படிக்கல் இடம்பிடித்தார்.   

கர்நாடகாவைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூர் அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியின் மிக முக்கிய வீரர்கள் ஒருவராக இடம்பிடித்துவிட்டார்.  

கடந்த வருடம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்ற IPL தொடரின் மூலம் பெங்களூர் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட தேவ்தத் படிக்கல், தனது முதல் தொடரிலேயே 5 அரைச் சதங்களுடன் 473 ஓட்டங்களை எடுத்தார்

இலங்கை தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

அதுமாத்திரமின்றி, இவ்வருடம் நடைபெற்ற IPL தொடரின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அவர், பின்னர் குணமடைந்து அந்த அணிக்காக விளையாடியிருந்தார்

அதுமாத்திரமின்றி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து, IPL வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்

அதேபோல விஜய் ஹசாரே தொடர் உட்பட அனைத்து உள்ளூர் தொடர்களிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தேவ்தத் படிக்கல் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது

ருத்துராஜ் கெய்க்வாட் (24 வயது)

தேவ்தட் படிக்கல் போன்றே கடந்த 2020ம் ஆண்டு IPL தொடரின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட ருத்துராஜ் கெய்க்வாட் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்

ருத்ராஜ், மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பிம்பிரி சின்ச்வாத் என்ற ஊரில் பிறந்தார். 24 வயதான அவர் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கிண்ணத் தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு தலைவராகச் செயல்பட்டார்.  

எனினும், குறித்த தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய ருத்ராஜ், இந்த வருடம் நடைபெற்ற IPL தொடரில் மிக சிறப்பாக விளையாடினார்

இலங்கை தொடர்: மும்பையில் தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

கடந்த வருடம் நடைபெற்ற IPL தொடரில் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால், இறுதியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக மூன்று அரைச் சதங்கள் குவித்தார்.  

அதேபோல, இந்த வருட IPL தொடரின் ஆரம்பத்தில் மூன்று போட்டிகள் சரியாக அவர் விளையாடவில்லை. எனினும், மீதமுள்ள போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு இரண்டு அரைச் சதங்கள் குவித்தார்.

எனவே, உள்ளூர் போட்டிகள் மற்றும் IPL தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு இலங்கை அணியுடனான தொடரில் வாய்ப்பு வழங்குவதற்கு அந்நாட்டு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதன்மூலம் பிம்பிரி சின்ச்வாத் ஊரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

நிதிஷ் ராணா (27 வயது)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிதிஷ் ராணாவும் கடந்த சில வருடங்களாகவே IPL தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை – இந்திய தொடர்

கடந்த வருட IPL தொடரில் சற்று திறமையினை வெளிப்படுத்தியிருந்த அவர், இவ்வருட IPL தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இரண்டு அரைச் சதங்களை மாத்திரம் குவித்தார்.  

எனவே, உள்ளூர் மற்றும் IPL தொடரில் ஓரளவிற்கு விளையாடி வந்தாலும் நிதிஷ் ராணாவிற்கு தற்போது தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சேத்தன் சக்காரியா (23 வயது)

இந்த வருட IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டவர் தான் இளம் வேகப் பந்துவீச்சாளரான சேத்தன் சக்காரியா

தனது முதல் போட்டியிலேயே எதிரணி வீரர்களின் முக்கிய விக்கெட்டுகளை தட்டித் தூக்கி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்

இம்முறை IPL தொடரில் தனது பந்துவீச்சின் தனித்துவத்தை வெளிப்படுத்தியிருந்த சேத்தன் சக்காரியா முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார்

ஒரேயொரு IPL தொடரில், அதுவும் வெறும் 7 போட்டிகளில் மட்டும் பந்துவீசிய சக்காரியா, இந்திய அணிக்கு எவ்வாறு தேர்வானது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தவான் தலைமையில் இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு தனது சகோதரரை இழந்தார். அதனைத் தொடர்ந்து கொரோனா 2ஆவது அலையில் தனது தந்தையை இழந்தார். இது சக்காரியாவுக்கு மிகப்பெரிய இழப்பைக் கொடுத்தது

எனினும், அவரை ஆறுதல் படுத்தும்படி இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிருஷ்ணப்பா கௌதம் (32 வயது)

இந்த வருட IPL தொடருக்கான ஏலத்தில் கடும் போட்டிக்கு பிறகு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் 9 கோடி ரூபா கொடுத்து எடுக்கப்பட்ட வீரர் தான் கிருஷ்ணப்பா கௌதம். இவர் சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஆவார்.

எனினும், இந்த வருட IPL தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை அவருக்கு கொடுக்கவில்லை

இருந்த போதிலும், கடந்த சில வருடங்களாகவே IPL தொடரில் தான் விளையாடும் அணிக்கான தனது பங்களிப்பை கிருஷ்ணப்பா கௌதம் மிகச் சிறப்பாக செய்து கொடுத்ததன் மூலம் முதல் முறையாக இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

எதுஎவ்வாறாயினும், இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா, குரூணால் பாண்டியா போன்ற சகலதுறை வீரர்களும், குல்தீப் யாதவ் போன்ற சுழல்பந்து வீச்சாளர்கள் பலரும் இருக்கும் போது கிருஷ்ணப்பா கௌதமை ஏன் இலங்கை தொடருக்காக தேர்வு செய்தார்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…