இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

Sri Lanka tour of Bangladesh 2022

232

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>115வது வடக்கின் பெரும் சமரை வென்றது சென். ஜோன்ஸ் கல்லூரி

அறிவிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் குழாத்திற்குள் மீண்டும் சகிப் அல் ஹஸன் அழைக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர் தனிப்பட்ட காரணங்களால் விளையாடாத நிலையில், பங்களாதேஷ் அணி தொடரை 2-0 என மோசமான முறையில் இழந்திருந்தது.

முழங்கால் உபாதை காரணமாக தென்னாபிரிக்க தொடரை தவறிவிட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் உடற்தகுதியின் அடிப்படையில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்திருந்த டஸ்கின் அஹ்மட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மொமினுல் ஹக் தலைமையில் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் அணி இளம் மற்றும் அனுபவ வீரர்களுடன் களம் காணவுள்ளது. இதில், ரெஜுவர் ரஹ்மான் ராஜா மற்றும் சொயிதுல் இஸ்லாம் ஆகியோர் அறிமுகத்தை பெற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

மொமினுல் ஹக் (தலைவர்), தமிம் இக்பால், மஹ்முதுல் ஹஸன் ரோய், நஜ்முல் ஹுசைன் செண்டோ, முஷ்பிகூர் ரஹீம், சகிப் அல் ஹஸன், லிடன் டாஸ், யசீர் அலி, தாஜுல் இஸ்லாம், மெஹிதி ஹாஸன் மிராஸ், எபடொட் ஹுசைன், கலீல் அஹ்மட், நூருல் ஹுசைன், ரெஜுவர் ரஹ்மான் ராஜா, சொயிதுல் இஸ்லாம், சொரிபுல் இஸ்லாம் (உடற்தகுதி தொடர்பில் அவதானம்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<