இலங்கையின் முதல் பயிற்சிப் போட்டி ஒத்திவைப்பு

158

ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை அணி விளையாடும் முதலாவது பயிற்சிப் போட்டி நடைபெறுகின்ற திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்குமுன் பயிற்சிப் போட்டிகள் இம்மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை அணியானது, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மோதவுள்ளன.

இதன்படி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (10) மெல்பேர்னில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே வெளியிட்டிருந்த போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஜிம்பாப்வே அணி அவுஸ்திரேலியாவுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை அணியுடனான பயிற்சிப் போட்டியை 11 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி முகாமைத்துவத்திடம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த போட்டியை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அயர்லாந்து அணிக்கு எதிராக ஒக்டோபர் 13 ஆம் திகதி மெல்போர்னில் உள்ள ஜங்ஸன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் 2ஆவது பயிற்சிப் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றில் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நமீபியாவை ஒக்டோபர் 16 ஆம் திகதியும் 2ஆவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை ஒக்டோபர் 18 ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் நெதர்லாந்தை ஒக்டோபர் 20 ஆம் திகதியும் எதிர்த்தாடும்.

இலங்கையின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் ஜீலோங், கார்டினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இதனிடையே, நமீபியாவுக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டி ஒக்டோபர் 16 ஆம் திகதி ஜீலோங்கில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை அணி ஜீலோங்கிற்குச் புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<