T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?

ICC T20 World Cup 2022

773
Strengths and weaknesses of Sri Lankan squad

ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தங்களுடைய அடுத்த இலக்காக அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை அணி ஒக்டோபர் 16ம் திகதி தங்களுடைய முதல் போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆசியக்கிண்ணத்தை வென்றிருந்தாலும் முன்னாள் உலக சம்பியன்களான இலங்கை, முதல் சுற்றிலிருந்து இந்த T20 உலகக்கிண்ணத்தையும் ஆரம்பிக்கிறது.

>> உலகக்கிண்ணம் பயணிக்கும் மீனவ தந்தையின் மகன் ; டில்ஷான் மதுசங்கவின் கதை!

ஆசியக்கிண்ணத்தை வென்றுள்ளதால் இலங்கை அணி மிகவும் பலமான அணியாக மாறியுள்ளதா? உலகக்கிண்ணத்தை வெல்லும் திறமை இலங்கைக்கு இருக்கிறதா? இல்லை இலங்கை அணிக்கு அதிர்ஷடத்தால் ஆசியக்கிண்ணம் கிடைத்ததா? என்ற பலதரப்பட்ட பேச்சுகள் சமுகவலைத்தளங்களில் பேசப்பட்டன.

உண்மையில் T20 உலகக்கிண்ணத்துக்கு செல்லும் அணி பலமானதா? பலவீனங்கள் உள்ளதா? இலங்கை அணி எந்தெந்த விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்? இலங்கை குழாத்தின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஸ்திரத்தன்மையான ஆரம்ப துடுப்பாட்டம்

இலங்கை T20 அணியின் நீண்ட நாள் கேள்விக்குறியாக இருந்த விடயம் ஆரம்ப துடுப்பாட்டம். இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கடந்த காலங்களில் பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தில், குசல் பெரேரா மற்றும் பெதும் நிஸ்ஸங்க, அதற்கு முன்னர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா, தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க, இடைக்கிடையில் நிரோஷன் டிக்வெல்ல என பல ஆரம்ப துடுப்பாட்ட ஜோடிகளை இலங்கை அணி ஆராய்ச்சி செய்திருந்தது.

இறுதியாக புள்ளிவிபர ரீதியில் குசல் மெண்டிஸ் T20 போட்டிகளுக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருப்பார் என கண்டறிந்ததுடன், அவருக்கு ஜோடியாக தொடர்ந்தும் பெதும் நிஸ்ஸங்கவை களமிறக்கியது. இந்த ஜோடியை ஆசியக்கிண்ணத்தில் பயன்படுத்திய நிலையில், இந்த விடயம் இலங்கைக்கு ஏதுவாக அமைந்தது.

ஆசியக்கிண்ணத்தின் முதல் போட்டியில் மோசமாக ஆடியிருந்தாலும் 45, 69 மற்றும் இந்திய அணிக்கு எதிராக 97 ஓட்டங்கள் என முக்கியமான இணைப்பாட்டங்களை பகிர்ந்தனர். இணைப்பாட்டங்கள் கிடைக்கப்படாத சந்தர்ப்பங்களில் அரைச்சதங்களை இவர்கள் பெற்றுக்கொண்டதுடன், ஆசியக்கிண்ணத்தில் தலா 2 அரைச்சதங்களையும் பெற்றிருந்தனர்.

வேகப்பந்துவீச்சு மற்றும் சுழல்பந்துவீச்சு என இரண்டுக்கும் சமபலமான ஆட்டத்தை குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் வெளிப்படுத்தக்கூடியவர்கள். மெண்டிஸ் வேகமான ஆரம்பத்தை கொடுக்கக்கூடியவர் என்பதுடன், நிஸ்ஸங்க ஆரம்பத்தில் நிதானமாக ஆடினாலும், சடுதியாக ஓட்டவேகத்தை அதிகரிக்கக்கூடியவர். எனவே சிறந்த ஆரம்ப ஜோடி இலங்கைக்கு முதல் வெற்றி.

மத்தியவரிசையின் பலவீனம்

இலங்கை துடுப்பாட்ட வரிசை ஆசியக்கிண்ணத்தில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்தது. ஆனாலும், அணியின் மத்தியவரிசை தொடர்ந்தும் குழப்பத்தை சந்தித்திருக்கிறது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்த தனுஷ்க குணதிலக்க நான்காமிலக்க வீரராக மாற்றப்பட்டுள்ளார். சரித் அசலங்க ஆசியக்கிண்ணத்தில் ஓட்டங்களை பெறவில்லை. தனன்ஜய டி சில்வாவுக்கு தொடர்ந்தும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

தனன்ஜய டி சில்வாவின் சுழல் பந்துவீச்சு அணிக்கு மேலதிக பலமாக இருந்தாலும், மத்தியவரிசையில் களமிறங்கும் வீரர் ஓட்டங்களை குவிக்கவேண்டியது கட்டாயம்.

தனுஷ்க குணதிலக்கவுக்கு மத்தியவரிசையில் போதுமான போட்டிகள் கொடுக்கப்படவில்லை. சரித் அசலங்கவின் கடைசி பிரகாசிப்புகளை பார்க்கும்போது இறுதி பதினொருவரில் அவர் பெயரிடப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. காரணம், தனன்ஜய டி சில்வா களமிறங்கிய கடைசி போட்டியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய துடுப்பாட்ட பிரகாசிப்பையும், பந்துவீச்சையும் வெளிப்படுத்தியிருந்தார்.

சரித் அலங்க, தனன்ஜய டி சில்வா மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோரில் இருவர் மாத்திரமே ஒரு போட்டியில் விளையாடமுடியும். இவர்களை தவிர்த்து மேலதிக வீரர்களில் அஷேன் பண்டார மாத்திரமே அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளார்.

எனவே துடுப்பாட்ட வரிசையை மேலும் பலப்படுத்துவதற்கு இவர்கள் மூவரும் கட்டாயம் ஓட்டக்குவிப்புக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது. இவர்கள் ஓட்டக்குவிப்புக்கு வந்தால் மாத்திரமே அவுஸ்திரேலியா போன்ற பௌன்ஸ் அதிகமாக இருக்கும் ஆடுகளங்களில் எம்மால் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

பினிசிங்கில் அசத்தும் நால்வர் ; பந்துவீச்சு மேலதிக பலம்

இந்த T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, பலமான துடுப்பாட்ட பினிசர்கள். ஆசியக்கிண்ணத்தில் இந்த இடம் இலங்கைக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்க மிக முக்கியமான காரணமாக இருந்தது.

அணித்தலைவர் தசுன் ஷானகவுடன், பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய நான்கு வீரர்களும் சிக்ஸர்களை விளாசக்கூடிய வல்லமையை கொண்டிருக்கின்றனர். அதேநேரம், தருணங்களுக்கு ஏற்றவாறு வேகமாகவும், நிதானமாகவும் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் உள்ளனர்.

T20 உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணிக்கு சிறந்த துடுப்பாட்ட ஆரம்பங்கள் கிடைக்குமாயின், இந்த நான்கு வீரர்களின் பங்களிப்பு அணியின் ஓட்டக்குவிப்பில் பிரதான காரணியாக மாறும்.

துடுப்பாட்டத்தை தாண்டி தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் T20 போட்டிகளில் அணிகளுக்கு தேவையான பந்துவீச்சாளர்கள்.

வனிந்து ஹஸரங்க இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவருடன் சாமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தேவையான நேரங்களில் பந்துவீச்சிலும் பங்களிப்பை வழங்த தவறுவதில்லை. எனவே, இலங்கை T20 அணியின் மிகப்பெரிய சக்தி இதுவென்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

140+ எக்ஸ்பிரஷ் வேகத்தை கடக்கும் பந்துவீச்சாளர்கள்

இலங்கை அணிக்கு எந்த உலகக்கிண்ணத்திலும் இல்லாத ஒன்று பரிசாக கிடைத்திருக்கிறது. எமது கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு குழாத்தில் மணிக்கு 140 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்துவீசக்கூடிய வீரர்கள் இரண்டிற்கும் மேல் இருப்பது வழமைக்கும் குறைவு.

அந்தவகையில் இம்முறை துஷ்மந்த சமீர, லஹிரு குமார ஆகியோர் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் வேகத்தை தொடக்கூடியவர்கள் என்பதுடன், இளம் வீரரான டில்ஷான் மதுசங்க மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் 140 இற்கும் அதிகமான வேகத்தில் பந்துகளை வீசக்கூடியவர்கள்.

அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் வேகம் என்பது ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கும் மிகப்பெரிய பொக்கிஷம். அந்தவரிசையில் இலங்கையின் 4 பந்துவீச்சாளர்கள் எதிரணிகளை மிரட்டக்கூடியவர்கள். பிரமோத் மதுசான் மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோர் ஆசியக்கிண்ணத்தில் வெளிப்படுத்திய திறமை நாம் அறிந்ததே.

ஆனால் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டுள்ளதால், அவர்களின் பிரகாசிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது சற்று கேள்விக்குறியாக உள்ளது. அதுமாத்திரமின்றி புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய வீரர்கள் இருந்தாலும், கடைசி 5 ஓவர்களை யார் வீசப்போகின்றனர்? அதற்கான பலம் எவ்வாறு இருக்கின்றது என்பது மற்றுமொரு கேள்விக்குறி. எனவே, வேகம் என்ற பலம் இலங்கை அணிக்கு எவ்வாறு உதவப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எதிரணிகளை மிரட்டும் மாயாஜால சுழல்

சகலதுறை வீரராக இருந்தாலும் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக இருப்பவர் வனிந்து ஹஸரங்க. அதிகமான சுழல் இல்லாவிட்டாலும், தூரமான பௌண்டரி எல்லைகளை கொண்ட அவுஸ்திரேலியா மைதானங்களில் இலங்கை அணியின் துறுப்புச்சீட்டு வனிந்து ஹஸரங்க.

விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பில் ஹஸரங்க பந்துவீச, ஒருபக்கம் ஓட்டங்களை கட்டுப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமையை மஹீஷ் தீக்ஷன கொண்டிருக்கிறார். மஹீஷ் தீக்ஷன பவர்-பிளே ஓவர்களில் தொடங்கி, மத்திய ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களிலும் அற்புதமாக பந்துவீசக்கூடியவர். எனவே, இந்த சுழல் பந்து ஜோடி எதிரணிகளை மிரட்டக்கூடிய இலங்கை அணியின் மற்றுமொரு ஆயுதம்.

இவர்கள் இருவரும் இறுதி பதினொருவரில் கட்டாயமாக விளையாடுவார்கள் என்ற நிலையில், மிகுதியாக இருக்கும் ஜெப்ரி வெண்டர்சே அனுபவம் கூடிய சுழல் பந்துவீச்சாளர். இவருக்கு பந்துவீச்சில் மோசமான காலகட்டங்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் தாண்டி கடந்தகாலமாக சிறந்த மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.

எனவே, தேவையான நேரத்தில் அணிக்கு தேவையானவற்றை செய்யக்கூடியவர் ஜெப்ரி வெண்டர்சே என்பதுடன், மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரவீன் ஜயவிக்ரமவும் எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூடிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர். அதனால், சுழல் பந்துவீச்சுத்துறை இலங்கை அணியின் நம்பிக்கைத்துறையாக மாறியிருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த T20 உலகக்கிண்ணமானது, மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை விதைத்துள்ளது. ஆசியக்கிண்ணம் வென்ற இலங்கை அணி, உலகக்கிண்ணத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஓங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை பொருத்தவரை இலங்கை கட்டாயமாக கிண்ணம் வெல்லவேண்டும் என நினைப்பவர்கள் அல்ல. தோல்வியடைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.

ஆனால் இலங்கை ரசிகர்கள் என்ற ரீதியில் அவர்கள் எதிர்பார்ப்பது, முன்னணி அணிகளையும், சர்வதேச தரத்தை கொண்டு எதிர்க்கவேண்டும். பலமான அணிகளுக்கு சவால் கொடுக்கவேண்டும். தோல்வியடைந்தாலும் இறுதிவரை போராடவேண்டும். இலங்கை கிரிக்கெட்டின் தரத்தை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்சிப்படுத்தவேண்டும் என்பதே ஒவ்வொரு இலங்கை ரசிகர்களினதும் மறுக்கமுடியாத எதிர்பார்ப்பாகும்!

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<