22 மில்லியன் வீரர்களை உருவாக்கும் ‘FOOTBALL FRIDAY’ கொழும்பில் ஆரம்பம்

112

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஜெயகமு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரண்டாவது நிகழ்ச்சியான புட்போல் ப்ரைடே (FOOTBALL FRIDAY)  நிகழ்ச்சி நாளை (19) கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.  

கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ள மக்கள் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பதற்காகவும், இளம் வீரர்களை கால்பந்து விளையாட்டின் மீது ஈர்க்கும் வகையிலும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை தொழில்முறை விளையாட்டு அமைப்பு மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

>>இலங்கையை FIFA தரப்படுத்தலில் 150இற்கு முன்னேற்றுவோம்: அமைச்சர் நாமல்

இதன்படி, புட்போல் ப்ரைடே நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண வைபவம் நாளை (19) கொழும்பு குதிரைப்பந்தயத்திடலில் மாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நடைபெறவுள்ளது.

அத்துடன் கொரோனா சுகாதார விதிமுறைகளைப் கருத்திற்கொண்டு அணிக்கு ஆறு பேர் கொண்ட மினி கால்பந்து தொடராக இது நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தத் தொடரில் குடும்பமாகவோ, நண்பர்களாகவோ பங்குபற்ற முடியும் என்பதோடு உணவுச் சாலைகள், களியாட்ட நிகழ்ச்சிகள் என பல்வேறுபட்ட அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புட்போல் ப்ரைடே நிகழ்ச்சி தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பொன்று நேற்று (17) விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர்,

”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிபுலாகல முதல் கொழும்பு வரையான விசேட ஒழுங்கையில் சைக்கிளோட்டம் வெற்றிகரமாக மூன்று வாரங்களாக நடைபெற்று வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தை மிக விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

>>Video – மன்செஸ்டர் சிட்டியின் EDERSONக்கு வந்த ஆசை! | FOOTBALL ULAGAM

இந்த நிலையில், புட்போல் ப்ரைடே இதன் இரண்டாவது வேலைத்திட்டமாகும். உற்சாகமிக்க ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கிலும், கால்பந்து விளையாட்டை பிரபல்யப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, கால்பந்து விளையாட்டை நேசிக்கின்றவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள மைதானங்களுக்குச் சென்று புட்போல் பிரைடே நிகழ்ச்சியில் இணைந்துகொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கால்பந்து விளையாட்டில் 2 மில்லியன் வீரர்களை உருவாக்குது தான் எமது இலக்காக உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

>>புளூ ஸ்டாருக்கு முதல் வெற்றி; சீ ஹோக்ஸ் – நியு யங்ஸ் மோதல் சமநிலையில்

இதன்படி, மிக விரைவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஜெயகமு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஞாயிறு சைக்கிளோட்டம் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<