இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

2247
Muttiah-Muralitharan-2

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

T-20 வருகையால் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி என்கிறார் முரளிதரன்

உலகம் பூராகவும் T-20 போட்டிகள் பிரபல்யமடைவதற்கு முன் பந்து வீசுவது இலகுவாக இருந்ததாவும், தற்போது அந்த நிலை முற்றிலும்…

இந்தியாவின் தி எகொனமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”இலங்கையின் கிரிக்கெட்டானது தற்போது குழம்பிப் போயுள்ளது. அரசியல்வாதிகள் தான் இலங்கை கிரிக்கெட்டை நிர்வாகம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட் நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்தி நிற்கின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கை. வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு அங்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் இலங்கை அணியின் ஜேர்சியை கிரிக்கெட் வீரர்கள் அணியும் போது கௌரவமும், மதிப்பும் காணப்பட்டது. எனினும், தற்போது அவ்வாறான நிலை உள்ளதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

”இதேநேரம், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது. அதேபோன்று 2014 T-20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. அவ்வாறான சாதனைகளை அண்மைக்காலமாக படைத்து வந்த இலங்கை அணி தற்போது பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, நான் ஒரு நாளில் சிறந்த பந்துவீச்சாளராக மாறவில்லை. நான்கைந்து வருடங்கள் அர்ஜுன ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்” எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்காவிட்டாலோ அல்லது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றாவிட்டாலோ அடுத்துவரும் போட்டிகளில் கதிரைகளில் உட்கார வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதுதான் இலங்கை அணியின் தற்போதைய நிலை.

அதேநேரம், கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 60 வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்கள். வருடமொன்றுக்கு 60 வீரர்களா? இது மிகவும் மோசமான அணுகுமுறை. இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இவ்வாறான மாற்றங்களால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவை இலங்கை கிரிக்கெட் சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்விக்கு முரளிதரன் கருத்து வெளியிடுகையில்,  

”குசெல் மென்டிஸை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணிக்காக எதிர்காலத்தில் பிரகாசித்து தொடர்ந்து அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆரம்ப காலங்களில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், ஒருசில மாதங்களில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஓரு சுற்றுப்பயணத்தில் அவரால் ஓட்டங்களை குவிக்க முடியாது போன காரணத்தால் அடுத்த தொடரில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இதுபோன்ற காரணங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது” என்றார்.

உபாதைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார் மெதிவ்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான …

கடந்த காலங்களில் முன்னாள் தலைவர்களான அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா போன்றவர்கள் இலங்கை அணிக்காக விளையாடியதன் காரணமாகத்தான் இலங்கை அணிக்கு கௌரவமும், வெற்றியும் கிடைத்தது. அதனாலேயே கிரிக்கெட் உலகில் இலங்கையின் பெயரை காண்பிக்க முடிந்ததாகத் தெரிவித்த முரளிதரன், அவ்வாறானதொரு நிலைமை தற்போது இலங்கை அணியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள், அரசியல்வாதிகளின் பிரவேசம் என்பவற்றால் இலங்கை கிரிக்கெட் அணி அழிவடைந்து வருவதாக முரளிதரன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க