SLC Level 2 பயிற்சியை நிறைவு செய்த சுரேஷ் மோகன், லவேந்திரா

723

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்காக வழங்கும் தரம்-II கிரிக்கெட் பயிற்சியாளர்கள் பாடநெறியினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் பத்மனாதன் லவேந்திரா ஆகியோர் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளனர். 

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

இதன் மூலம் இந்த இரண்டு பயிற்சியாளர்களும் இலங்கை கிரிக்கெட் சபை வழங்குகின்ற தரம்-II கிரிக்கெட் பயிற்சியாளர் பாடநெறியினை யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக பூர்த்தி செய்தவர்களாக தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 

இந்த பயிற்சியாளர்கள் இருவரும் இலங்கையின் பழம்பெரும் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக இருக்கும் வடக்கின் சமர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் பாடசாலைகளை நீண்ட காலம் பயிற்றுவித்து, கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக நீண்ட அனுபவம் கொண்டிருக்கும் நிலையிலையே இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் பாடநெறியினை நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில், 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பயிற்றுவிப்பாளராக கடமையேற்ற சுரேஷ் மோகன்,  தனது ஆரம்ப காலத்தில் யாழ். மத்திய கல்லூரியின் 13, 15, 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளை பயிற்றுவித்துள்ளார். பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு யாழ். மத்திய கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருந்தார். 

சுரேஷ் மோகன்

தொடர்ந்து, சுரேஷ் மோகனின் ஆளுகைக்குள் வந்த யாழ். மத்திய கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட்  போட்டியில் 2007ஆம் ஆண்டு தொடக்கம் ஆதிக்கம் செலுத்த தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையில் தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் வெற்றியினைப் பதிவு செய்து சாதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

இதேநேரம், கிட்டத்தட்ட 19 வருடங்கள் சுரேஷ் மோகனின் பயிற்றுவிப்பில் இருந்த யாழ். மத்திய கல்லூரி அணி மூன்று தடவைகள் மாத்திரமே வடக்கின் சமரில் தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

அதேநேரம், சுரேஷ் மோகனின் ஆளுகையிலான யாழ். மத்திய கல்லூரி அணியினர் 19 வயதுக்குட்பட்ட சிங்கர் பாடசாலை கிரிக்கெட் தொடரில் பிரிவு–III இல் இருந்து பிரிவு–II இற்கு தரமுயர்த்தப்பட்டிருப்பதோடு, மாகாண, உள்ளூர் T20 தொடர்களில் 10 தடவைகள் வரை யாழ் மத்திய கல்லூரி அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும், சுரேஷ் மோகனின் வழிகாட்டலிலேயே யாழ். மத்திய கல்லூரி அணியில் இருந்து தேசிய இளையோர் கிரிக்கெட் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்த், செல்வராசா மதுஷன் போன்ற வீரர்கள் தெரிவாகியதும் குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை பயிற்றுவித்து வரும் லவேந்திரா தனது ஆளுகையில் கடந்த 2017/18ஆம் ஆண்டு தமது 13 வயதுக்குட்பட்ட அணியினை பிரிவு-II இல்  இருந்து பிரிவு-I இற்கு தரமுயர்த்த உதவியதோடு, 17 வயதுக்குட்பட்ட அணியினையும் (2013) பிரிவு-III இல் இருந்து பிரிவு-II இற்கு தரமுயர்த்த பங்களிப்பு வழங்கினார். 

பத்மனாதன் லவேந்திரா

video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இதேநேரம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணியும், லவேந்திராவின் பயிற்றுவிப்பிலேயே கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-III இல் இருந்து பிரிவு-II அணியாக தரமுயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட 40 வீரர்கள் கொண்ட 15 வயதின்கீழ் தேசிய குழாமில் சென். ஜோன்ஸ் கல்லூரியின் இளம் வீரர் அன்டன் அபிஷேக் பயிற்சி பெற்றார். இவரை 13 வயதின்கீழ் அணியில் இருந்து வழிநடாத்திய வீரராகவும் லவேந்திரா உள்ளார். 

இவற்றுக்கு மேலதிகமாக இந்த இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் யாழ் மாவட்ட அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு வடக்கின் பாடசாலை கிரிக்கெட் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த இந்த இரண்டு பயிற்சியாளர்களும், இலங்கை கிரிக்கெட் சபையின் தரம்-II பயிற்சியாளர் பாடநெறியினை பூர்த்தி செய்தமைக்கு ThePapare.com உம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க …